சென்னை: கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயரில் இருந்து பாஷ்யம் என்ற பெயர் நீக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலின் கோயம்பேடு ரயில் நிலையத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு 'பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ' ரயில் நிலையம் என பெயர் மாற்றப்பட்டது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு எவ்வித விளக்கமும் அளிக்கப்படாததால் சர்ச்சை எழுந்தது.
![koyembedu metro name](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-cmrl-name-changed-koyambedu-meto-7208446_24062021202107_2406f_1624546267_634.jpg)
ஒரு சிலர் பாஷ்யம் என்பவர் சுதந்திர போராட்ட வீரர் என்றும், சுதந்திர போராட்ட காலகட்டத்தில் ஒற்றை ஆளாக சென்னை ஜார்ஜ் கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்ற பாடுபட்டவர் என்றும் சமூக வலைதளங்களை தகவலை பரப்பி வந்தனர். இருப்பினும் இது உண்மையல்ல என்பது பின்னர் தெரியவந்தது.
யார் இந்த பாஷ்யம்
சென்னை மெட்ரோ ரயிலின் வருவாய் குறைவாக இருப்பதால் அதனை ஈடுகட்டும் வகையில் விளம்பரத்தின் மூலமாக கூடுதல் வருவாய் பெறும் முயற்சியில் சென்னை மெட்ரோ ரயில் ஈடுபட்டு வந்ததும், இதற்காக நேமிங் உரிமை எனப்படும் பெயரில் விளம்பரதாரரை இணைக்கும் நடவடிக்கையில் சென்னை மெட்ரோ ரயில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. 'பாஷ்யம்' என்பது ஒரு கட்டுமான நிறுவனத்தின் பெயராகும்.
பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் வைத்ததற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் என்ன நாட்டு மக்களுக்காக போராடினாரா என்பது போன்ற கேள்விகளை எழுப்பினர்.
கோயம்பேடு மெட்ரோ ரிட்டர்ன்ஸ்
இது அப்போதைய நிலையில் பெரும் சர்ச்சையாக இருந்தது. இந்த நிலையில் தற்போது கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயரில் இருந்து பாஷ்யம் என்ற பெயர் நீக்கப்பட்டு மீண்டும் பழைய நிலையிலேயே பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.