சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள மையத்தினை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "தடுப்பூசிதான் கரோனாவை வெல்லும் பேராயுதம். இதை பேரியக்கமாக நடத்த முதலமைச்சர் எடுத்த சீரிய முடிவால், இந்த முயற்சி வெற்றி நடைபோடுகிறது.
சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம் ஒரு லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது, சென்னையில் 2 லட்சத்து 37 ஆயிரம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.
நான்கு மாதங்களில் அதிகப்படியான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முன்மாதிரி மாவட்டமாக சென்னை விளங்கும் வகையில் செயல்பாடுகள் அமைந்துள்ளது” என்றார்.
கோயில் நில அபகரிப்பு தொடர்பான செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, ”ஜமின் ஒழிப்புச் சட்டத்தின்படி தாம்பரம் கிஷ்கிந்தா வசமுள்ள 177 ஏக்கர் நிலம் வருவாய்த் துறை வசம் உள்ளது. ஆனால், பாப்பாசத்திரம் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சொந்தமானது என இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை சார்பாக பலமுறை மேல்முறையீடு செய்யப்பட்டடுள்ளது. இது குறித்த விவரங்களை முதலமைச்சரிடம் தெரிவித்து ஓரிரு நாளில் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரசீது இருக்கா - கே.சி.வீரமணியை நெருங்கும் மண் பதுக்கல் வழக்கு!