தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் பெண்களின் நலன் குறித்த மருத்துவ கருத்தரங்கு நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் பெண்கள் நல மருத்துவர் கவிதா ராமலிங்கம் கலந்துகொண்டு பெண்களின் உடல்நலன் குறித்த தகவல்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியாவில் உள்ள பெண்களில் 75 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் தங்களின் உடல்நலன் குறித்து கவலைப்படுவதில்லை. தங்களை சார்ந்தவர்களின் உடல்நலனிலேயே அதிக அக்கறை செலுத்துகின்றனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கு ஒவ்வொரு தனி மனிதருக்கும் பங்கு உள்ளது. ஆண் பெண் இருவரும் எவ்வாறு சிறுவயது முதல் பழக வேண்டும் என்பதை கற்றுத்தரவேண்டும். இதுபோன்ற குற்றங்களை தடுக்க, பெண்களுக்கு தற்காப்பு குறித்தும், உதவிக்கு யாரை அழைக்க வேண்டும் என்பது குறித்தும் எடுத்துக்கூற வேண்டும்.
பெண்களைப் பொருத்தவரை சிறு வயது முதல் அவர்களின் உடல்நலத்தை பாதிக்கக்கூடிய அனைத்தையும் சரியாக பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக அவர்களின் ஊட்டச்சத்து மற்றும் உடல் எடையை சரியாக கண்காணிக்க வேண்டும்.
பெண்கள் பதின்ம வயதை அடையும்போது அவர்களின் உடல்நிலையை கண்காணிக்க வேண்டும். 25 வயதை கடந்த பின்னர் ஏதாவது புற்றுநோய் வர வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் சோதனை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது மாறியுள்ள வாழ்க்கை முறையால் ஆண்கள் பெண்கள் இருவருக்கும் உடல் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்க்க உடல் எடையை சரியாக பராமரிப்பதுடன், உடற்பயிற்சியை மேற்கொள்வது அவசியமாகும். ஆண்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. எனவே பெண்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதை ஒழுங்காக கடைபிடித்தாலே மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் வருவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்" என்றார்.
இதையும் படிங்க: சென்னைக் காவல் ஆணையர் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்!