சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், பணியில் இருந்த செவிலியர் பயிற்சி மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செவிலியர் பயிற்சி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து செவிலியர் பயிற்சி மாணவிகளுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் நாராயண பாபு, கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனை இயக்குனர் விஜயா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயா, ‘உயிரிழந்த மூதாட்டிக்கு தொடர்ந்து 10 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தும் அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. அவர் மாரடைப்பால் இறந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியாகியுள்ளது.
மேலும், செவிலியர் பயிற்சி மாணவிகளின் வேண்டுகோளுக்கினங்க எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் உரிய பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது’ என்றார்.