சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4ஆவது நினைவு நாளை முன்னிட்டு, இன்று(ஆகஸ்ட் 7) பெசன்ட் நகர், ஆல்காட் பள்ளி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் 'கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி' நடைபெற்றது.
இம்மாரத்தான் போட்டிக்கான 5 கி.மீ., தூரப்போட்டியை திமுக இளைஞர் அணிச்செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினும், 10 கி.மீ., போட்டியை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவும், 21 கி.மீ., போட்டியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவும், 42 கி.மீ., போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனும் தொடங்கி வைத்தனர்.
இந்தியாவில் இதுவரை எந்த மாரத்தானிலும் இல்லாத அளவுக்கு 43,320 பேர் பதிவு செய்து கலந்துகொண்டனர். இதில் 10,985 பேர் பெண் போட்டியாளர்கள் ஆவர். இந்த மாரத்தான் ஓட்டத்தில் பதிவுக்கட்டணமாக பெறப்பட்ட ரூ.1,20,69,980 தொகையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமாரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்தார்.
![கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி -எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு 1.21 கோடி நிதி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16039230_a.jpg)
தொகை முழுவதையும், எழும்பூர் அரசு குழந்தைகள் மற்றும் தாய் சேய் நல மருத்துவமனைக்கு வழங்கப்பட்டு, ஏழைக் குழந்தைகளின் மருத்துவப் பயன்பாட்டிற்காக இந்நிதி செலவிடப்படும்.
மேலும், மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். ஆசியாவிலேயே மிகப்பெரிய நினைவு மாரத்தானாக அங்கீகரிக்கப்பட்டதற்கான சான்றிதழை ‘ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம் தமிழ்நாடு முதலமைச்சரிடம் வழங்கினர். மாரத்தான் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை முதலமைச்சர் வழங்கிப் பாராட்டினார்.
இதையும் படிங்க:அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பது தேச துரோகமா..? ஒரே மதம், ஒரே மொழி என்பது தேசவிரோதமா..? - முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி