சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் உருவப்படத்தை ஆகஸ்ட் 2ஆம் தேதி சட்டப்பேரவையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, ”கருணாநிதி உருவப்படம் சட்டப்பேரவை வளாகத்தில் ஆகஸ்ட் இரண்டாம் தேதி மாலை 5 மணியளவில் திறந்து வைக்கப்பட இருக்கிறது. இதற்கு ஆளுநர் பன்வரிலால் புரோஹித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிப்பார்கள்.
படத்திறப்பு விழாவிற்கு அனைத்து முக்கிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். எந்த பாகுபாடும் பார்க்கப்பட மாட்டாது. சட்டப்பேரவை கூடும் தேதி வரும் நாள்களில் அறிவிக்கப்படும்” என்றார்.
முதலமைச்சரின் டெல்லி பயணம்
முன்னதாக டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்துப் பேசினார். அச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், “தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப் படத்தை திறந்து வைக்கவும் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், மதுரையில் அமைக்கப்படவிருக்கும் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டும் விழாவுக்கும், கிண்டி மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கும் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். இச்சூழலில், குடியரசு தலைவரின் வருகை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.