தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மனோ தங்கராஜ் நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “தேர்தல் தேதி கடந்த 26ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 64 பேரூராட்சி அரசுப் பணியிடங்கள், கூட்டுறவுத் துறை பணியிடங்கள் என மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட அரசுப் பணிகளுக்காக ஆளுங்கட்சியினர் பணம் பெற்றுக்கொண்டு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்களை ஞாயிற்றுக்கிழமைகளில் அலுவலகம் வரச் செய்து பணம் கொடுத்தவர்களுக்கு முன்தேதியிட்டு பணி நியமன ஆணை தயார் செய்து அவற்றை நேரடியாக வீடுகளுக்கே சென்று கொடுக்கப்பட்டுவருகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசுப் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்படுவது தேர்தல் விதிமீறல் ஆகும்” எனத் தெரிவித்தார்.
இது குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு நேரில் சந்தித்து ஆதாரங்களுடன் புகார் அளித்திருப்பதாகவும் புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுக்காவிடில் சட்டப்படி நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்போம் என பத்மநாபபுரம் திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வீட்டுக்கடன் வட்டிகளைக் குறைத்த எஸ்பிஐ வங்கி!