ஓலைக்குளம் கிராமத்தில் பட்டியலின வகுப்பை சேர்ந்த பால்ராஜ் என்பவர் வைத்திருந்த ஆடுகள், அதே ஊரின் ஆதிக்க சாதியை சேர்ந்த சிவசங்குவின் ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பட்டிக்குள் நுழைந்துள்ளன. இதனைக்கண்ட பால்ராஜ் உடனே தனது ஆட்டை வெளியே ஓட்டிவரச் சென்றுள்ளார்.
இதனை அங்கிருந்தவர்கள் பார்த்ததும் பிரச்சனையாகி பால்ராஜிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர் அவரை அடித்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். திருமணமாகி பிள்ளைகள் இருக்கும் பால்ராஜை காலில் விழ வைத்து அவமானப்படுத்திய இந்நிகழ்வுக்கு, பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான கனிமொழியும், பால்ராஜ் மீதான வன்கொடுமைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஓலைக்குளம் கிராமத்தில் பட்டியலினத்தவர்களை இழிவுபடுத்தி காட்சிப்பதிவு செய்து வெளியிட்ட குற்றவாளிகளை தாமதமின்றி கைது செய்த தமிழக காவல்துறைக்குப் பாராட்டுகள்.
பட்டியலினத்தவர்கள் மீது அவதூறுகளும், வன்கொடுமைகளும் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை, காவல் துறை அனைவருக்கும் உணர்த்த வேண்டும்“ என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சாதிய வன்கொடுமை: ஆடுகள் இடம் மாறி மேய்ந்ததால் காலில் விழ வைத்து கொடூரம்!