சென்னை: சென்னை விமான நிலையம் பன்னாட்டு முனையம், உள்நாட்டு முனையம் என இருந்தபோது, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கோரிக்கையை ஏற்று, அப்போதைய பிரதமர் வி.பி.சிங், உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராஜா் உள்நாட்டு முனையம் என்றும், பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா பன்னாட்டு முனையம் என்றும் அறிவித்தார்.
உள்நாட்டு முனையத்தில் காமராஜர் படமும், பன்னாட்டு முனையத்தில் அண்ணா படமும் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 2008ஆம் ஆண்டு இந்த இரண்டு முனைகளையும் புதுப்பித்துக் கட்டும்பணி நடந்தது. அப்போது இரண்டு முனைகளில் உள்ள காமராஜர், அண்ணா படங்கள் அகற்றப்பட்டன.
கட்டுமானப் பணிகள்: இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து அகற்றப்பட்ட தலைவர்களின் படங்களை மீண்டும் வைக்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசியல் கட்சிகளும், பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், 2013ஆம் ஆண்டு கட்டட பணிகள் முடிந்து திறப்பு விழா நடந்த பின்பும், தலைவர்களின் படங்களை வைக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி அகற்றப்பட்ட தலைவா்களின் பெயர் பலகைகளும் மீண்டும் வைக்கப்படவில்லை. சென்னை பன்னாட்டு முனையம், சென்னை உள்நாட்டு முனையம் என்ற பெயர் பலகை மட்டுமே இருந்தன. அதேபோல் பயணிகளின் விமான பயணச்சீட்டுகளில் உள்நாட்டு முனையம், சர்வதேச முனையம் என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது குறித்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர், தலைவர்களின் பெயர்களை சூட்டவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இம்மாதம் ஏப்ரல் 1ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு நாடார் சங்க அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
![சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் பெருந்தலைவர் காமராஜா் படம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-kamarajphotoattheairport-photo-script-7208368_19042022194908_1904f_1650377948_776.jpg)
காமராஜர், அண்ணா பெயர் பலகைகள்: இதற்கிடையே சென்னை உள்நாட்டு விமான நிலையம் வருகை பகுதியில் இருந்த பெருந்தலைவர் காமராஜர் படம் புறப்பாடு பகுதியில் பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனை நடக்கும் இடத்தில் வலதுபுறம் வைக்கப்பட்டுள்ளது. படத்தை விமானத்தில் ஏறச்செல்லும் எல்லா பயணிகளும் பார்க்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டு முனையத்தில் அண்ணா படம் வருகை பகுதியில் உள்ளது. ஆனால், பயணிகள் பார்க்கும் வகையில் இல்லை என கூறப்படுகிறது. அது பற்றி அலுவலர்கள் தரப்பில் கூறும்போது, பன்னாட்டு முனையத்தில் கட்டுமானப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை, பணிகள் முடிவடைந்ததும் அண்ணாவின் படமும் அங்கு வைக்கப்படும் எனக் கூறினர். மேலும், உள்நாட்டு முனையத்தில் 'காமராஜர் உள்நாட்டு முனையம்', பன்னாட்டு முனையத்தில் 'அண்ணா பன்னாட்டு முனையம்' என்ற பெயர் பலகைகள் வைக்கப்படவில்லை.
அதேபோல் விமான பயணச்சீட்டுகளிலும் காமராஜர் உள்நாட்டு முனையம், அண்ணா பன்னாட்டு முனையம் என்று அச்சிடப்படவில்லை. இது சம்பந்தமாக அலுவலர்களை கேட்டபோது, 'இரண்டு முனையங்களையும் இணைத்து கட்டும்பணி நடந்து வருகிறது. அந்த பணி அடுத்த சில மாதங்களில் முடிவடைந்துவிடும். அதன் பின் முறைப்படி திறப்பு விழா நடந்த பின்பு பெயர் பலகைகள், பயணச்சீட்டுகளில் தலைவர்களின் பெயர்களை அச்சிடப்படும்' என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'ஆளுநரை பணி செய்யவிடாமல் தடுக்கும் நோக்கில் கொடிகளை வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி புகார்'