டெல்லி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மாணவியின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பெற்றோர் மனு தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த நீதிமன்றம், மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய மருத்துவ குழுவை நியமித்தது. மறு பிரேத பரிசோதனையின் போது தந்தை உடனிருக்கலாம் எனவும், அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு நியமிக்கப்பட்டிருக்கும் மூன்று மருத்துவர்களுடன் தங்கள் தரப்பு மருத்துவர் உடனிருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம் பிரேத பரிசோதனையின் போது வழக்கறிஞருடன் தந்தை கலந்துகொள்ள அனுமதி அளித்தனர்.
இதனையடுத்து மாணவியின் தந்தை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் மறு பிரேத பரிசோதனை செய்ய தடை இல்லை என்று தெரிவித்தனர்.
இந்த மனு மீது இன்று நடைபெற்ற விசாரணையில், ”சென்னை உயர்நீதின்றம் உரிய உத்தரவை பிறப்பித்துள்ளபோது மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?", என கேள்வி எழுப்பியது.
இதற்கு பெற்றோர் தரப்பில், நடந்து முடிந்த பிரேத பரிசோதனையில் வழக்கறிஞரோ தந்தையோ இல்லாமல் நடைபெற்றதாக தெரிவித்தனர். இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில், மறுபிரேத பரிசோதனை தொடர்பான அனைத்து விவரங்களும் உரிய நேரத்தில் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இனி இந்த வழக்கு குறித்த கோரிக்கைகளை உயர்நீதிமன்றத்தை நாடலாம் என தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி போராட்டம் - சாதித்தது என்ன? - அன்பில் மகேஷ் கேள்வி