சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், மாணவி பயின்ற தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. அப்பள்ளியின் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமின்றி பள்ளியின் அலுவலகத்திலிருந்த மாணவர்களின் சான்றிதழ்கள் உள்ளிட்ட பலவும் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால், அங்கு படித்து வந்த மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி இன்று (ஜூலை19) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், 'முதலமைச்சர் அறிவுறுத்தல்படி நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பள்ளியை ஆய்வு செய்தோம். நீதிமன்ற வழக்கு காரணமாக பெற்றோரை நேற்று நேரில் சந்திக்க முடியவில்லை. மறைந்த மாணவியின் தாய் எம்.காம் படித்துள்ளார். அவர் கேட்டுள்ளபடி, அவருக்கு பணி வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.
பள்ளியில் சான்றிதழ் எரிந்துள்ளன எனவும், அருகில் உள்ள தனியார் பள்ளிகள் சக்தி பள்ளிக்கு உதவ தயாராக இருப்பதாக கூறி உள்ளனர். நாற்காலி உட்பட அனைத்தும் தூக்கி செல்லப்பட்டன. முதலமைச்சருடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், நாங்கள் பள்ளியில் நடந்தது என்ன? தீர்வு என்ன? மாணவர்களின் பெற்றோரின் மனநிலை என்ன? என்பது குறித்து கூற உள்ளோம். அதனை தொடர்ந்து முதலமைச்சர் அறிவுறுத்தல்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சான்றிதழ் எரிந்ததை பலர் அழுதபடி எங்களிடம் காட்டினர். சான்றிதழ்களில் புகை வாடை இப்போதும் வருகிறது. கள்ளகுறிச்சியில் கலவரம் திட்டமிட்டு நடந்துள்ளது. கோபத்தில் ஏற்படவில்லை என நீதிமன்றமே கூறியுள்ளது. மாற்றுச் சான்றிதழ்கள் மட்டுமின்றி பிறப்பு சான்றிதழ் உட்பட மாணவர்களின் பல சான்றிதழ்கள் எரிந்துள்ளன. எனவே, வருவாய் துறை மூலம் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்து கொடுப்போம். மாணவர்களுக்கு டியூப்ளிகேட், டிசி எளிதில் வழங்க முடியும்.
மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்படாமல் இருப்பது தொடர்பாக முதலமைச்சருக்கு அறிக்கை வழங்க உள்ளோம். மாணவியின் அருகில் அமர்ந்து படித்த ஒரு மாணவி அந்த பள்ளியிலேயே படிக்க விரும்புவதாக கூறினார்.
மாணவி இறந்து 24 மணி நேரத்திற்குள் துறை ரீதியான விளக்கம், மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டு விட்டது. அந்தப் பள்ளியின் அருகே 5 அரசுப் பள்ளி , 17 தனியார் பள்ளிகள், 2 கல்லூரி இருக்கிறது. இதை அந்த மாணவர்களுக்கு பயன்படுத்த முடியுமா? என முதலமைச்சரிடம் ஆலோசனைப் பெற்று நடவடிக்கை எடுப்போம்.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பின் போதே, போலி நபர்கள், வெளிமாநிலத்தவர்களைக் கண்டறிந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கும் கட்டாய தமிழ்த் தாள் நடைமுறையை கொண்டு வருவதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும்' என்று தெரிவித்தார்.
முன்னதாக, சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவிகளை அருகில் உள்ள பள்ளியில் படிக்க வைப்பதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தனியார் பள்ளிகள் ஸ்டிரைக் அறிவிப்பு - அமைச்சர் நாளை பேச்சுவார்த்தை?