சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக, மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், ஆதாரங்கள் உள்ளதாகவும் தங்கள் தரப்பிலிருந்து பரிந்துரைக்கும் மருத்துவர் அல்லது எய்ம்ஸ் மருத்துவர்களை கொண்டு மறு பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டுமென நீதிபதி சதீஷ்குமார் முன்பு தந்தை ராமலிங்கம் தரப்பில் இன்று காலை வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆனால் நீதிபதி, எய்ம்ஸ் மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்து, அதில் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இல்லை என அறிக்கை அளித்தால், வன்முறை மூலம் ஏற்பட்ட ஒட்டுமொத்த பாதிப்பு மீண்டு விடுமா என கேள்வி எழுப்பியதுடன், அரசு மருத்துவர்கள் மூவர் மற்றும் ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணர் ஒருவர் என நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தார்.
மேலும், உடற்கூறாய்வின்போது மனுதாரரின் வழக்கறிஞர் கே. கேசவன் உடனிருக்கலாம் என்றும் அனுமதித்திருந்தார். இந்நிலையில், சின்னசேலம் பள்ளி மாணவி உடலை மறு உடற்கூறாய்வு செய்ய தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்க வேண்டும் என ராமலிங்கம் தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் முறையீடு செய்தார்.
ஆனால், கிரிமினல் விவகாரங்களில் தலையிட இந்த அமர்வுக்கு அதிகார வரம்பு இல்லை என்றும், இன்று காலை தனி நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில் எவ்வித மேல்முறையீடு என்றாலும், உச்ச நீதிமன்றத்தை தான் அணுக முடியும் , இங்கு தாக்கல் செய்ய உகந்ததல்ல என நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவு