ஒரு சின்னஞ்சிறிய கிராமத்திலுள்ள வீட்டில் திருடுவதற்காக நள்ளிரவு நேரத்தில் திருடர்கள் நுழைகின்றார்கள். அந்த வீட்டிலுள்ள அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றனர். திருட வந்தவர்களுக்கு இது மிகவும் வசதியாக போய்விட, வீட்டில் இருந்த நகை, பணம், பண்ட பாத்திரத்துடன் சேர்த்து வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணிண் தாலிக் கயிற்றையும் திருடினர்.
வந்தவரை லாபம் என்று நினைத்தார்களோ என்னவோ, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கைகுழந்தையின் தொட்டில் புடவையையும் எடுத்துகொண்டு குழந்தையை தரையில் படுக்கவைத்துவிட்டுச் சென்றனர். அடுத்த நாள் கண்விழித்த அந்த குழந்தையின் தாயார் அதிர்ச்சியில் உறைந்துபோனார். வீட்டில் ஒரு பொருள்கூட இல்லை. பதறியவாறு தன் குழந்தை இருந்த இடத்துக்கு சென்றவருக்கு குழந்தையைப் பார்த்ததும் அளவில்லா நிம்மதி. அதன்பிறகு எப்போதும் கூறுவாறாம், "பணம், பண்டம் எல்லாம் போனால் போகட்டும் நல்ல வேலை நீ மட்டும் அன்று அழவில்லை. அழுதிருந்தால் உன்னையும் கொன்றிருப்பார்கள்" என்றார்.
பிற்காலத்தில் வளர்ந்த அந்த குழந்தை தனது கரகர குரலில் கூறுகிறது, 'அன்றே அழுதிருந்தால் இன்று இத்தனை வஞ்சம், இத்தனை துரோகம், இத்தனை பழிசொல், இத்தனை வசவுகள் என இந்த அனைத்தையும் பார்க்காமல் போயிருப்பேன்'. அந்த கரகர குரலுக்கு சொந்தமான பெயர் கலைஞர் கருணாநிதி.
அவர் வாழ்ந்த அத்தனை காலமும் அவரை சுற்றிதான் அரசியல் சுற்றிக்கொண்டிருந்தது. 13முறை சட்டமன்ற உறுப்பினர், 5 முறை முதலமைச்சர். வீட்டில் வாழ்ந்த நாட்களோடு கோட்டையில் இருந்த நாட்கள்தான் அதிகம். ஆட்சியிருந்தால் சிறந்த மன்னனாக மக்களுக்கு தேவையானவற்றை செய்வது, ஆட்சி இல்லாவிட்டால் சிறந்த போர்ப்படை தளபதியாக மக்களுக்காக சண்டை செய்வது என அவர் சிந்தையில் ஓடியது அனைத்தும் மக்கள், மக்கள்தான்.
கருணாநிதியை வசைபாடுபவர்கள் அப்போதும் சரி, இப்போதும் சரி அவர் கொண்டுவந்த திட்டத்திற்குள் இருந்துகொண்டுதான் அவரை வசைபாடுவார்கள். அவர் கட்டிய பாலங்களால்தான் தமிழ்நாடு உயர தெரிகிறது, அவர் கொண்டுவந்த சமூக நீதி திட்டங்களால்தான் வடமாநிலங்களைவிட தமிழ்நாடு முன்னூறு அடி முன்னே சென்றுகொண்டிருக்கிறது.
அவரது திட்டங்கள் எப்போதும் ஒருசாராருக்கு மட்டுமே இருந்தது இல்லை. அவரால், தமிழ்நாட்டின் கடைக்கோடி மனிதனுக்கு அரிசிக்கான திட்டம் கொண்டுவர முடியும். தமிழ்நாட்டின் தலைநகரில் ஐடி பார்க்கையும் கொண்டுவர முடியும். ஏனெனில் அவரது திட்டம் இன்றைக்கானது இல்லை நாளைக்கானது.
கருணாநிதிக்கு ஒரு நாளைக்கு 48 மணி நேரம் கொடுத்தாலும் பத்தாது. கடிதம், கட்டுரை, கதை, கவிதை, வசனம், திரைக்கதை என எழுத்தில் என்னென்ன இருக்கிறதோ அத்தனையையும் எழுதியவர். மேடை பேச்சு, திருமண விழாவில் கலந்துகொள்ளுதல், தொண்டர்களை சந்திப்பது, கட்சி அலுவலகத்துக்கு செல்வது, கோட்டைக்கு செல்வது என அரசியலில் என்னென்ன இருக்கிறதோ அத்தனையும் தொட்டவர். ஆனால் எதிலும் அவர் சலிப்பு காட்டியதே இல்லை. அவருக்குள் ஒரு தேடல் இருந்துகொண்டே இருந்தது. அந்த தேடல்தான் தமிழ்நாட்டை தேடி பில்கேட்ஸை வரவைத்தது.
இந்திய அரசியலில் இவர் அளவுக்கு இகழ்ச்சி அடைந்தது இல்லை. ஆனால் அத்தனையிலிருந்தும் அசுர பலத்தோடு எழுந்து வந்தவர். அதற்கு ஒரே காரணம் அவர் ஏற்றுக்கொண்ட அரசியல் கொள்கையும், வந்த வாழ்க்கையும் அப்படி.
அவர் முகத்தில் வாங்கிய குத்துகளைவிட முதுகில் வாங்கிய குத்துகள் தான் அதிகம். சாதியால் குத்தினார்கள், அதிகாரத்தால் குத்தினார்கள், நட்பால் குத்தினார்கள். ஆனால் அத்தனை குத்துகளையும் வாங்கிக்கொண்டு தமிழ்நாட்டுக்கு பூங்கொத்துகளை கொடுத்துக்கொண்டிருந்தார். அன்று வீட்டிற்கு திருடர்கள் வந்தபோது கருணாநிதி எனும் குழந்தை அழுதிருந்தால் கலைஞர் கருணாநிதி என்னும் தலைவன் கிடைக்காமல் தமிழ்நாடு தலை நிமிர்ந்திருக்காது...!#ThankYouKalaignar