சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் இபிஎஸ்-ஓபிஎஸ் இருதரப்பாக பிரிந்து தலைமைக்கான யுத்தத்தை நடத்தி வருகிறார்கள். ஓபிஎஸ்-ஐ ஓரங்கட்டிவிட்டு இ.பி.எஸ் பொதுச்செயலாளராக நியமிக்க இபிஎஸ் தரப்பினர் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிகிறது.
கடந்த ஜூன் 23ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் தரப்பில் கொண்டு வந்த 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டு, ஜூலை 11ஆம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பரபரப்பான சூழ்நிலை உருவானது. சட்டத்திற்கு புறம்பாக பொதுக்குழு நடைபெறுவதாக கூறி, ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார்.
அதன் தொடர்ச்சியாக நாளுக்கு நாள் ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பினர் தனித்தனியாக முகாமிட்டு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். பிறகு ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை அடைந்து, உச்சநீதிமன்றத்துக்கும், சென்னை உயர்நீதிமன்றத்துக்கும் சென்றது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை காலை (ஜூலை 11) தீர்ப்பளிக்க உள்ளது. இந்த நிலையில், இன்று ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் முகாம்களிலும் நீதிமன்ற தீர்ப்பை எதிர்நோக்கி பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. மேலும் இரண்டு முகாம்களிலும் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் தங்களது ஆதரவாளர்கள், வழக்கறிஞர்களுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
நாளைய தீர்ப்பில், உயர்நீதிமன்றம் பொதுக்குழுவை நடத்த அனுமதி கொடுத்தாலோ அல்லது மறுத்தாலோ ஒற்றைத் தலைமை விவகாரம் இதனுடன் முடியாது. இது இறுதியும் அல்ல என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த வழக்கில் இரண்டு வகையான தீர்ப்புகளை உயர்நீதிமன்றம் கொடுக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
முதலாவதாக பொதுக்குழுவை நடத்த தடையில்லை என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பையே உயர்நீதிமன்றமும் வழங்கலாம் எனவும், இரண்டாவதாக தேர்தல் ஆணையத்தை அணுகி பொதுக்குழுவை நடத்தலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி கூறுகையில், "அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது முடிவடையாது. இப்போது அரையிறுதியைத்தான் தொட்டுள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் அதிமுகவின் 'இரட்டை இலை' சின்னத்தை முடக்கவும் வாய்ப்புள்ளது.
மறுபக்கம் அதிமுகவின் பெரும்பாலான முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் இ.பி.எஸ்க்கு ஆதரவு கொடுப்பதால் சின்னத்தை இ.பி.எஸ் கைப்பற்றவும் அதிக வாய்ப்புள்ளது" என்று குறிப்பிட்ட அவர், 2024-ல் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலின்போது இந்த பிரச்சினைக்கு முடிவுக்கு வரலாம் என தெரிவித்தார்.
நாளை நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பி.எஸ் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "அப்படி ஒன்றும் கட்டாயமில்லை. மேலும் இ.பி.எஸ் ஒற்றை தலைமையை முடிவு செய்தால், ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தை அணுகலாம்", என தெரிவித்தார்.
அதிமுகவின் செய்தி தொடர்பாளர் சிவசங்கரி கூறுகையில், "நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறும். எங்களது தலைவர் இ.பி.எஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்படுவார். பொதுக்குழு உறுப்பினர்கள் அதிகமாக இ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக உள்ளதால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்பில்லை. இந்த பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும்" என்று தெரிவித்தார்.
இதேபோல ஓபி.எஸ்-ஐ எவராலும் கட்சிலிருந்து நீக்க முடியாது என ஆதரவாளர்கள் கூறியுள்ளனர் - "எங்களது தலைவர் ஓ.பி.எஸ் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கையை வென்று மூன்று முறை முதலமைச்சராகி உள்ளார். எனவே அதிமுக எங்களுக்குத்தான் சொந்தம்" என ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஒருவர் கூறினார்.
பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து சென்னை வந்துள்ள நிர்வாகிகள் சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு வரும்படி இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே சென்னை அருகே வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள இடத்தில் இபிஎஸ் ஆதரவாளர்கள் ஆய்வு செய்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினர். பொதுக்குழு ஏற்பாடுகள் காரணமாக வானகரம், மதுரவாயில் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.