2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் 20 பேர் மீது நீதிபதி கர்ணன் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குபதிவுசெய்து, நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் நீதிபதி கர்ணன் ஆஜராகாததால், நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது. இதற்கிடையே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தன் முன்பு, ஆஜராக கர்ணன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நீதிபதி கர்ணனுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதற்கு அவர் ஒத்துழைக்க மறுத்துவிட்டார்.
தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் கர்ணனுக்கு ஆறுமாதங்கள் சிறை தண்டனை விதித்தது. இதனையடுத்து கர்ணன் கொல்கத்தா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பிறகு விடுதலையானார். அதன்பிறகு அவர் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து, ”ஊழலுக்கு எதிரான செயலாக்க கட்சி” என்ற கட்சியை தொடங்கினார்.
இந்நிலையில், மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில்ஊழலுக்கு எதிரான செயலாக்கக் கட்சியின்தலைவர் ஓய்வுபெற்றநீதிபதி கர்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ”நான் மத்திய சென்னை மற்றும் வாரணாசி தொகுதிகளில் போட்டியிட உள்ளேன். மோடியை எதிர்க்க வேண்டும் என்று வாரணாசியில் போட்டியிடுகிறேன்.
நீதித் துறையில் ஊழல் அதிக அளவில் இருக்கிறது. இதைஎந்த அரசியல் கட்சிகள் சொல்வதில்லை. காரணம் அரசியலமைப்புச் சட்டப்படி அரசியல் கட்சிகள் நீதித் துறை பற்றி விமர்சனம் செய்யக் கூடாது என்று தவிர்த்து வருகின்றனர். ஆனால் அதை நான் சொல்லிவருகிறேன். அனைத்து துறையிலும் ஊழல் இருக்கிறது. அதனால் நான் போட்டியிடுகிறேன். தமிழ்நாட்டில்எங்கள் கட்சி சார்பாக 20 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட இருக்கின்றனர்” என்றார்.