சென்னை: மதுரையைச் சேர்ந்த இரு பெண்கள், நட்புடன் பழகத் தொடங்கி, பின்னர் அது காதலாக மாறியதால், பிரிய மனமில்லாமல் சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர். இந்நிலையில், இருவரையும் காணவில்லை எனப் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கில் தங்களைத் துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் இரு பெண்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
காவல் துறைக்குப் புதிய விதி
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மூன்றாம் பாலினத்தவர், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனங்களைத் துன்புறுத்தக் கூடாது எனக் காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை காவல் துறையினர் துன்புறுத்தினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறையினர் நடத்தை விதிகளில், புதிய விதியைக் கொண்டுவர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.
நீதிமன்றம் பாராட்டு
இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசின் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா முன்னிலையாகி, உரிய விதிகளைக் கொண்டுவர காவல் துறைத் தலைவர், அரசுக்கு முன்மொழிவுகளை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்குப் பாராட்டுத் தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 23ஆம் தேதி ஒத்திவைத்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு: மாணவியின் தந்தை விசாரணைக்கு ஆஜர்!