ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத் மாத்தோவுக்கு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் கரோனா அறிகுறிகள் இருந்தன. அதைத் தொடர்ந்து, அக்டோபர் 1ஆம் தேதி அவரை பரிசோதனை செய்ததில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனைக்கு அக்டோபர் 19ஆம் தேதி ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அமைச்சர் ஜகர்நாத் மாத்தோ அழைத்து வரப்பட்டார். இங்கு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஜகர்நாத் மாத்தோ, தற்போது நல்ல நிலையில் உள்ளார்.
அவரது உடல்நிலை குறித்து எம்ஜிஎம் மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு இணை இயக்குநர் சுரேஷ் ராவ் கூறும்போது, "மூன்று வாரங்களுக்கு முன்பு அமைச்சர் ஜகர்நாத் மாத்தோ எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்தது. இதனால், ஜார்க்கண்டிலிருந்து சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்.
இங்கு எக்மோ சிகிச்சை அளிக்கும்போது அவரின் உடல்நிலை சற்று முன்னேற்றம் காணப்பட்டது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவரது நுரையீரலில் முன்னேற்றம் ஏற்படுகிறதா என்று கண்காணித்தோம். ஆனால், வைரஸ் தொற்றால் நுரையீரல் முழுவதும் செயலிழந்து விட்டது. எனவே, அமைச்சருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. தற்போது அவருக்கு மாற்றப்பட்ட நுரையீரல் நன்றாக செயல்பட்டு வருகிறது. தற்போது, வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருகிறார்" என்றார்.