சென்னை: அதிமுக தொடங்கப்பட்டு 49 ஆண்டுகள் நிறைவடைந்து 50ஆவது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, பெஞ்சமின், காமராஜ், செல்லூர் ராஜு, மாவட்டச் செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நினைவிடங்களில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த ஜெயக்குமார், "அதிமுக மாபெரும் தொண்டர்களைக் கொண்ட இயக்கம். 100 ஆண்டுகளுக்கும் மேல் கழகம் இருக்கும். சசிகலாவுக்கும், அதிமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பொதுச்செயலாளர் என அவரே போட்டுக்கொண்டால், அது தேர்தல் ஆணைய விதிமீறல். இதில் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்போம்.
1996ஆம் ஆண்டு அவரால்தான் தோல்வியுற்றோம். கட்சிக்காரர்களைக் கொடுமைப்படுத்தியிருக்கிறார். எந்தப் புரட்சியும் அவர் செய்யவில்லை. பிறகு எதற்குப் புரட்சித் தாய் பட்டம்? தொண்டர்கள் இவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
கட்சிக்கு நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டுமே. மாநில தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாகச் செயல்பட்டது. அதிமுக புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திமுகக்கு இது போலியான வெற்றி.
நாங்கள் குழந்தை இல்லை. பாஜக கட்டுப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம் என்று சொல்வதை ஏற்க முடியாது. அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட இயக்கம். இதை யாராலும் அழிக்க முடியாது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'நிவாரண பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்க' - முதலமைச்சர் ஸ்டாலின்