சென்னை: சமீபத்தில் மீண்டும் திறக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடத்தைக் காண மக்கள் ஆர்வத்துடன் வருகின்றனர். ஜெயலலிதா நினைவிடத்தின் சிறப்பையும், அங்கு வந்த பார்வையாளர்கள் எண்ணத்தையும் இத்தொகுப்பு பதிவு செய்கிறது.
ஜெயலலிதா நினைவிடம்:
எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிமுகவின் முகமாக திகழ்ந்த ஜெயலலிதா, 6 முறை தமிழ்நாட்டு மக்களால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். அவரது உடல் மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுமார் 50 ஆயிரத்து 472 சதுர அடி பரப்பளவில் நினைவு மண்டபம், அருங்காட்சியம், அறிவுத்திறன் பூங்கா உள்ளிட்டவை புதிய கட்டமைப்புகளில் உருவாக்கப்பட்டுள்ளன. பீனிக்ஸ் பறவை வடிவில் பிரமாண்ட நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த செலவு 80 கோடி ரூபாய் ஆகும்.
மெருகேற்றிய கருங்கல் நடை பாதை வசதி, நீர் தடாகங்கள், புல்வெளி உள்ளிட்டவை இதற்கு அழகு சேர்க்கிறது. நினைவு மண்டபத்தின் இருபுறமும் ஆண் சிங்க வடிவில் கருங்கல்லால் ஆன சிலைகள் மற்றும் அதனை தாங்கும் பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நினைவிட வளாகத்தில் மின்சார வசதி, மின் விளக்குகள், கண்காணிப்பு கேமரா வசதி, ஒலி அமைப்பு வசதி, நினைவு மண்டபத்தில் அணையா விளக்கு வசதிகள் உள்ளன.
2018 ஆம் ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த நினைவிட பணிக்காக அடிக்கல் நாட்டினர். இந்நிலையில், கடந்த ஜனவரி 27 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலிதா நினைவிடத்தை திறந்துவைத்தார். அறிவியல் திறன் பூங்கா, அருங்காட்சியகப் பணிகள் முடியாத நிலையில் பிப்ரவரி 2ஆம் தேதி நினைவிடம் மூடப்பட்டது. அனைத்து பணிகளும் முடிந்ததால், கடந்த 9ஆம் தேதி எம்ஜிஆர் ஜெயலலிதா நினைவிட வளாகங்கள் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டன.
ஜெயலிதா நினைவிடத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள்:
ஜெயலிதா நினைவிடத்தில் "மக்களால் நான் மக்களுக்காக நான்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
இந்த அருங்காட்சியத்தில் ஜெயலலிதாவின் மெழுகு சிலை மற்றும் ஜெயலிதாவின் பல்வேறு புகைப்படங்கள் உள்ளன.
நாம் கேட்கும் கேள்விகளுக்கு திரையில் ஜெயலிதா வந்து பதில் சொல்வதுபோல மெய்நிகர் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கும் வண்ணமாக அங்குள்ள சைக்கிளை மிதித்தால், திரையில் சாதனைகள் ஒவ்வொன்றாக கடந்து செல்வதை காணலாம்.
அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவில் குளிர்சாதன வசதி அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் படத்திற்கு டிஜிட்டல் முறையில் மலர் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கருத்து:
இதுகுறித்து நம்மிடம் பேசிய தயாநிதி எனும் பார்வையாளர், ஜெயலலிதா தற்போது உயிரோடு இருந்திருந்தால் இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி இருப்பார். ஆனால், தற்போது மே 2ஆம் தேதி எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்று அப்போதுதான் தெரியும். மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்தவர் ஜெயலலிதா என்று தெரிவித்தார்.
அதேபோல் தலைமலை என்பவர், எம்ஜிஆரை மிஞ்சி மக்கள் நலன் சார்ந்த பணிகளை செய்துள்ளார். மக்களால் நான், மக்களுக்காக நான் என்று சொல்லும் சக்தி ஜெயலலிதாவுக்கு உண்டு என்றார்.
சுகானா யாஸ்மின் என்பவர், என்னுடைய திருமணம் ஜெயலிதாவின் திருமண உதவி திட்டத்தின் மூலம் நடைபெற்றது. கரோனா தொற்று காலத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால், பொதுமக்களுக்கு கஷ்டம் தெரியாமல் பார்த்துக்கொண்டிருப்பார் என்று தெரிவித்தார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் பொதுமக்கள் ஆர்வமுடன் அவரின் திருவுருவச் சிலையை வணங்கிச் செல்கின்றனர். வெப்ப பரிசோதனை செய்த பின்பே பார்வையாளர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.