அதிமுக ஒற்றைத் தலைமையின் கீழ்தான் செயல்பட வேண்டும் என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து, நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக நிர்வாக முறை குறித்தோ, தேர்தல் முடிவு குறித்தோ பொதுவெளியில் யாரும் பேச வேண்டாம் என கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”அதிமுகவில் பிளவு இருப்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி நடைபெறுகிறது. அதிமுகவில் உட்கட்சி குழப்பத்திற்கு திமுகதான் காரணம். ஆட்சியை கலைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன. பிரிவை விதைத்து ஆட்சி, கட்சிக்கு தொந்தரவு கொடுப்பவர்களுக்கு அதிமுகவினர் இடமளிக்கக் கூடாது.
ஒற்றைத் தலைமை குறித்து காலம்தான் முடிவு செய்யும். அதிமுகவை ஒழித்துவிடும் நோக்கில் பலர் திமிங்கலங்கள் போல் செயல்படுகின்றனர். 1.5 கோடி தொண்டர்கள் இருக்கும் கட்சியில் சிறு சிறு பிரச்னைகள் வரத்தான் செய்யும். சிண்டு முடித்து அதிமுகவை பிளவுபடுத்தலாம் என்ற கனவு பலிக்காது. உட்கட்சி விவகாரம் குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதிக்கலாம். அதுவரை அதிமுகவினர் ‘கப்சிப்’ என்று இருக்க வேண்டும்” என்றார்.