சென்னை: அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அதிமுக சார்பில் அண்ணா தொழிற்சங்கத்தினர் நேற்று (ஜூன் 2 ) ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் மின்வாரிய தலைமை அலுவலகம் அருகே நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அப்போது பேசிய அவர், "திமுக அரசு பொறுப்பேற்கும் போதெல்லாம் மின்துறையை அழித்துவிடுகிறது. அதிமுக ஆட்சி செய்த காலக்கட்டங்களில் ஏற்படாத மின்வெட்டு, திமுக ஆட்சியில் ஏற்படுவதற்கு காரணமே ஊழல் செய்வதற்காகத்தான். தமிழ்நாட்டில் செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கி, வெளி மாநிலத்திலிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்யவே திமுக இதை செய்துவருகிறது.
தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை முன்னேற்ற 5 பொருளாதார நிபுணர்கள் நியமிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அரசுக்கு அவர்கள் அளித்த அறிக்கைகள் குறித்து திமுக விளக்க வேண்டும்.
திமுக அரசின் ஆட்சி தொழிலாளர் விரோத ஆட்சி. தொழிலாளர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும், கட்டடங்களையும் மீண்டும் திறப்பதே திமுக அரசின் செயல்பாடாக உள்ளது . இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் 4.5 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்ப திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: அரசாணை அறிவிப்புகள் கடைக்கோடி மக்களுக்கு சென்றுள்ளதா? - அலுவலர்களிடம் முதலமைச்சர் கேள்வி