மழை பெய்ய வேண்டி அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் யாகம் இன்று யாகம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு யாகம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் “தமிழ்நாட்டில பொதுவாக பருவமழை கைக்கொடுக்கின்ற நிலையில் 100 விழுக்காடு மழைப்பொழிவில் 40 விழுக்காடு மட்டுமே கிடைத்துள்ளது. 60 விழுக்காடு மழைப் பொழியவில்லை. இதனால் தமிழ்நாடு முழுவதும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
வறட்சியை எப்படி சமாளிப்பது என்பது குறித்து முழுமையாக எங்கள் தலைவி ஜெயலலிதா எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார். இந்நிலையில் எல்லாவற்றையும்விட மேன்மையானவன் இறைவன். இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லை என்று சொல்வதில்லை என்ற அடிப்படையில் இன்றைக்கு எல்லா மாவட்டங்களிலும் மழைப்பொழிய வேண்டி யாகம் நடத்தபட்டுவருகிறது. நிச்சயமாக இறைவன் நமக்கு கை கொடுப்பான். தேவையான மழைப்பொழிவை அளித்து வறட்சியை நீங்கச் செய்வார்.
அதேபோல் நாம் தற்போது மரம் நட்டுள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள 6 கோடி மக்களும் ஒரு மரம் நட்டால் 6 கோடி மரமாகும். இதனால் மழைப்பொழிவு அதிகரிக்கும். நம்முடைய அடுத்த சந்ததியினரின் பாதுகாக்க இந்த முயற்சியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். மழைப்பொழிவதற்கு யாகம் நடத்தப்படுவது என்பது ஒரு விதமான நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு இறைவன் மதிப்பளித்து மழையைப் பொழிய வைப்பார்.
மழைநீர் சேகரிப்பு கட்டாயம் என்று திட்டத்தை கொண்டுவரும் போது அனைவரும் விமர்சித்தார்கள். சமுதாயம் நோக்கத்தோடு, சமுதாயம் மேன்மையடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டுவந்த ஜெயலலிதாவின் திட்டத்துக்கு எத்தனை எதிர்ப்புகள் எழுந்தன. மருந்து கசக்கும் ஆனால் அதுதான் மனிதனுக்கு ஆரோக்கியத்தையும், சுகத்தையும் கொடுக்கும். அந்த வகையில் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டத்தை எண்ணி பார்த்ததற்கு நன்றி. தற்போதும் அனைத்துக் கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வலியுறுத்தப்பட்டுவருகிறது.
இது மேலும் துரிதப்படுத்துப்படும். சென்னைக்கு தற்போது 550 மில்லியன் லிட்டர் தண்ணீர் அளிக்கப்பட்டுவருகிறது. கேரளா 2 மில்லியன் லிட்டர்தான் தருவதாகக் கூறினார்கள். அதை மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. கேரளா அளிக்கும் தண்ணீரை யாரும் மறுக்கவில்லை” என்றார்.