சென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் அரசுக்கு எதிராக 5 ஆம் தேதி நடக்கவிருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஒத்தி வைத்து அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இணைந்து ஜாக்டோ ஜியோ அமைப்பை உருவாக்கி தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் போராடி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் போராட்டம் நடத்தியப் போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தது. மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றித் தரப்படும் என எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் வாக்குறுதியும் அளித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் முக்கியக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆட்சி அமைந்து ஒராண்டை கடந்தும் எந்தவிதமான கோரிக்கையும் நிறைவேற்றவில்லை. இதனால் சங்களின் நிர்வாகிகள் உறுப்பினர்களிடம் பதில் கூற முடியாத நிலை ஏற்பட்டது.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிகளவில் சம்பளம் பெறுகின்றனர் எனவும், மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை கொண்டுவருவது சாத்தியமில்லை என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறி வந்தது, மேலும் அவர்களை கொதிப்படைய செய்தது. இதனால் வேறு வழியின்றி ஜாக்டே ஜியோ அமைப்பினர் திமுக அரசிற்கு எதிராக போராட்டம் நடத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். அதற்கான ஆயுத்தப் பணிகளிலும் ஈடுப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. தாஸ், அன்பரசு, தியாகராஜன் வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஏறத்தாழ 15 நிமிடங்கள் சந்தித்து பேசினர்.
இச்சந்திப்பின்போது, ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முதலமைச்சரிடம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்கள் தொடர்பான கோரிக்கை மனுவினையும், இந்த மாத இறுதியில் ஜாக்டோ ஜியோ நடத்தவுள்ள மாநில மாநாட்டிற்கு கலந்து கொள்ள இசைவு வழங்க வேண்டும் என்பதற்கான மனுவினையும் அளித்தனர்.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிதியமைச்சர் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து முரணான தகவல்களை கூறி வருவது குறித்தும், தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராகப் பேசி வருவது குறித்தும் தெரிவித்தனர். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும், 1.1.2022 முதல் வழங்க வேண்டிய 3 சதவித அகவிலைப்படியினை வழங்கிட வேண்டும், காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை வழங்கிட வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 101 மற்றும் 108 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். பள்ளிக்கல்வி ஆணையர் பணியிடத்தினை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினால் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் எதிர்வரும் 5 ஆம் தேதி நடைபெற திட்டமிட்டிருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர்-பணியாளர் அமைப்புகள் கோரிக்கை தொடர்பாக நடத்தத் திட்டமிட்டுள்ள அனைத்து இயக்க நடவடிக்கைகளையும் ஒத்திவைக்க வேண்டும் என அதில் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: சஞ்சய் ராவத்துக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவல்!