இது தொடர்பாக, ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஜூன் 1 முதல் 12 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பானது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கரோனா காரணமாக, உளவியல் ரீதியாக பாதிப்படைந்துள்ள மாணவர்களுக்கு, அமைச்சரின் இந்த அறிவிப்பானது மிகவும் கண்டனத்திற்குரியது. தற்போது நாளுக்கு நாள் தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பல்கி பெருகி வரும் நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு தயாராகக்கூடிய சூழ்நிலையே இல்லை.
மேலும், கரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்கள் எவ்வாறு தேர்வுக்கு வர இயலும். தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்து, மாணவர்கள் வீட்டிலிருந்து தேர்வு மையத்திற்குப் பொதுப் போக்குவரத்து மூலம் வந்து, மன அமைதியுடன் தேர்வினை எழுதுவார்கள் என்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
பெற்றோரும், தங்கள் பிள்ளைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்திலேயே இருப்பார்கள். இதோடு மட்டுமல்லாமல், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியானது மே 27 ஆம் தேதியிலிருந்து மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பும், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான பெரும் நோய் தொற்று காலத்தில், ஊடரங்கு நிறைவுப் பெற்று, நோய் தொற்றின் தீவிரம் குறைந்த பின்னர், மாணவர்களுக்கு தேர்வினை எதிர்கொள்வதற்கான உரிய கால அவகாசத்தினையும் உளவியல் ரீதியாக தேர்வினை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கி, அதன் பின்னர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை நடத்துவதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் ” எனக் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா அச்சம்; பொதுத்தேர்வை தள்ளி வைக்கக்கோரி வழக்கு!