சென்னை: ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் செல்வம், மோசஸ், தியாகராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஒன்றிய அரசு வழங்கியுள்ள 11 விழுக்காடு அகவிலைப்படியினையும் ரத்து செய்யப்பட்ட சரண் விடுப்பினையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பழைய ஓய்வூதியத்திட்டம்
பழைய ஓய்வூதியத்திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். 2017,2019இல் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நடத்திய வேலை நிறுத்தப்போராட்ட காலங்களை பணிக்காலமாக வரன்முறைப்படுத்தவேண்டும்.
பணிமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்களை மீண்டும் அவர்கள் பணியாற்றிய பணியிடத்திலேயே பணியமர்த்த வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினை களையவேண்டும்.
கல்லூரிப் பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணி மேம்பாடு உடனடியாக வழங்கவேண்டும். காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும்.
பள்ளிக்கல்வித்துறை ஆணையரை மாற்ற கோரிக்கை
பள்ளிக்கல்வித் துறை இயக்குநராக பணியேற்கும் அலுவலர் அரசுப் பணியில் ஆசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர், இணை இயக்குநர் ஆகிய நிலைகளில் பணியாற்றி, கல்வித் துறையில் அனுபவ முதிர்ச்சி பெற்றதன் அடிப்படையில் இயக்குநராக நியமிக்கும் நடைமுறை கடந்த 150 ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, இந்த நடைமுறை மாற்றப்பட்டு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை மாற்றி மீண்டும் பணிமூப்பு- கல்வித் துறையில் கள அனுபவ அடிப்படையில் வரும் அலுவலரையே பள்ளிக்கல்வி இயக்குநராக பணியமர்த்த வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: 'பள்ளிகளைத் திறக்க தயாராகி வருகிறோம்' - அமைச்சர் அன்பில் மகேஷ்