சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. மே 2ஆம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில், திமுக பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது.
மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை, மே 7ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் பொறுப்பேற்றது. தமிழ்நாட்டின் 16ஆவது சட்டப்பேரவையின் முதலமைச்சராக ஸ்டாலினும், அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
சட்டப்பேரவை முன்னவராக அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு அரசு கொறடாவாக கோவி. செழியன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். பதவியேற்று முதல் கையெழுத்தாக, ரூ.4000 நிவாரணம் உள்ளிட்ட ஐந்து கோப்புகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் மே 11ஆம் தேதி காலை தொடங்கியது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை தற்காலிகத் தலைவர் கு. பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
அடுத்து நடைபெற்ற கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவராக (சபாநாயகர்) அப்பாவு தேர்வுசெய்யப்பட்டார். துணை சபாநாயகராக கு. பிச்சாண்டி தேர்வானார்.
இந்த நிலையில், 16ஆவது சட்டப்பேரவையின் முறைப்படியான பட்ஜெட் கூட்டத் தொடர், வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டம் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் இன்று (ஜூன் 9) வெளியிட்டார்.
நோ அப்டேட்
முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்று ஒரு மாதம் ஆன பின்பும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் இணையதளம் http://www.assembly.tn.gov.in, இதுவரை அப்டேட் செய்யப்படாமல் உள்ளது.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி ஆகியோரின் புகைப்படங்கள் முதல் பக்கத்தில் விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2005ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி, தலைமைச் செயலகத்திலிருந்து பேரவையின் வலைதளத்தினை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.
'வரலாறு' பக்கத்தில் 'Hon'ble Chief Minister Message' பகுதியில், ஜெயலலிதா தொடங்கிவைக்கும் புகைப்படமும், 2005ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதியிட்ட வாழ்த்து மடலும் இன்றுவரை மாற்றப்படவில்லை.
இந்த இடைப்பட்ட நேரத்தில் (2006-2011), திமுக ஆட்சிக்கு வந்தபோது, முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்த்து மடல் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதன்பின்னர் 2011 இல் ஆட்சிக்கு வந்த அதிமுக, 2021 வரை ஆட்சியில் இருந்தது.
அதைத்தொடர்ந்து, தற்போது திமுக ஆட்சிக்கு வந்து, ஒரு மாதமாகியும் இணையதளத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இந்தத் தளத்துக்குத் தேவையான உள்ளடக்கங்களைத் தமிழ்நாடு சட்டப்பேரவையிடமிருந்து பெற்று, தேசிய தகவல் மையம் (National Informatics Centre) பராமரித்துவருகிறது.
இதேபோன்று தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tn.gov.in இல் ஒரு சில துறைகளின் இணையதள பக்கத்தில் இடம்பெறும் தகவல்களும் புதுப்பிக்கப்படாமல் உள்ளன.