சென்னை: அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நீண்ட கால ஆயுள் தண்டனைக்கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி திமுக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இந்த அறிவிப்பில் இதில் பல்வேறு வகை குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு நீண்ட காலமாக சிறையில் வாடும் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் சாதி மோதல், பாலியல் வன்கொடுமை, அரசுக்கு எதிரான செயல்பாடுகள், குண்டுவெடிப்பு குற்றங்களில் ஈடுபட்டவர்களை குறிப்பாக இஸ்லாமியக் கைதிகளை விடுவிக்க தயக்கம் காட்டி வருகிறது.
யார் இந்த கைதிகள்?
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் 38 இஸ்லாமிய சிறைவாசிகள், 27 முதல் 28 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்த சிறைவாசிகளில் 17 பேர் 1998ஆம் ஆண்டு நடைபெற்ற கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, இவர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது.
மேலும், ஒரு அரசாணை வெளியிட்டு சாதி மோதல், பாலியல் வன்கொடுமை, அரசுக்கு எதிரான செயல்பாடுகள், குண்டுவெடிப்பு, ஊழல் உள்பட 17 வகையான குற்றங்களில் தொடர்புடையவர்களை விடுதலை செய்ய முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில் வழக்கமாக நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளின் நன்னடத்தையைப் பொறுத்து சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படுவர்.
பல சிறைக் கைதிகள் விடுதலை
2008ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பின் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 1400 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதேபோல முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 100ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனை அனுபவித்த 1,627 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், சில இஸ்லாமிய கைதிகளின் விடுதலை நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல்வாதிகளின் கருத்து
இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
ஆர். முத்தரசன், மாநில கட்சி செயலாளர், சி.பி.ஐ கூறியிருப்பதாவது, "மற்ற கைதிகளை முன் விடுதலை செய்யும்போது, ஏன் இஸ்லாமிய சிறைவாசிகளை தொடர்ந்து பயங்கரவாதிகளாகப் பார்க்க வேண்டும்.
மேலும், நிறைய இஸ்லாமியக் கைதிகள் குற்றம் செய்யாமலேயே நீண்ட காலமாக சிறையில் வாடுகின்றனர். இதனை அரசு பரிசீலித்து இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
நவாஸ்கனி, நாடாளுமன்ற கீழவை உறுப்பினர் இவ்விவகாரம் குறித்துப் பேசுகையில், 'இந்தப் பிரச்னை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். அரசு இது சம்பந்தமாக ஒரு குழு ஒன்றை அமைத்துள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு நன்றாகப் பரிசீலித்து நீண்ட நாள்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யும் எனும் முழு நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
வன்னி அரசு, துணை பொதுச்செயலாளர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் இருந்து பேசியதாவது, 'முதலில் பொது மன்னிப்பு என்றால் என்ன? அரசு கைதிகளை முன் விடுதலை செய்யும்போது பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டும்.
இந்த முறை முன் விடுதலை தொடர்பாக குழு அமைத்துள்ளதால் இஸ்லாமியக் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
அரசு அமைத்த குழுவின் நோக்கம்
சிறையில் நீண்ட காலமாக தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்தக் குழுவில் மனநல மருத்துவர், மருத்துவக் கல்வி இயக்குநர், சிறைத்துறையின் தலைமை நன்னடத்தை அலுவலர், குற்றவியல் சட்டத்தில் நிபுணத்துவம் உள்ள மூத்த வழக்கறிஞர், சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் துணைத் தலைவர் பதவியில் உள்ள ஒருவர் என ஆறு பேர் இடம்பெற உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இந்தக் குழு, கைதிகளை பரிசோதனை செய்து நன்கு அவர்களின் பின்னணியை அறிந்து கைதிகளை விடுதலை செய்ய பரிந்துரை செய்யும். இக்குழுவின் பரிந்துரையே இவ்விவகாரத்தில் மிக முக்கியமாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை!