பணம் பத்தும் செய்யும் என்பார்கள். ஆனால், கரோனாவையும் வரச்செய்யும் என்ற செய்தியால் பீதி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பணத்தின் மூலம் கரோனா பரவும் என்பதற்கு இதுவரை எந்தச் சான்றும் இல்லை. ஆனாலும், இது சாத்தியமா என மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு நிபுணர்களிடம் கேட்டபோது பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களைத் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாகப் பெயர் வெளியிட விரும்பாத மூத்த மருத்துவர் நம்மிடம் கூறியபோது, ”பணம் ஒரு காகிதம் என்பதால் அதில் நீண்ட நேரம் கரோனா வைரஸ்களால் உயிர் வாழ இயலாது. அதேநேரம் பணம் என்பது அடிக்கடி பலரின் கைகளில் புழங்கும் ஒரு பொருள் என்பதால், அதன் மூலம் பரவாது எனக் கூற முடியாது. அதனால், பணத்தைக் கையாண்டபின், கைகளால் வாய், மூக்குப் பகுதிகளைத் தொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
நாள்தோறும் அதிகளவில் பணத்தைக் கையாளும் வங்கி அலுவலர் ஒருவரிடம் இதுகுறித்து நாம் கேட்டபோது, “பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் பொருள்களைத் தொட்டால் கரோனா பரவும் என்பது சரியென்றால், பணத்தாலும் பரவும்தானே. இதற்கான தரவுகள் இல்லை என்றாலும், வங்கிகளில் கிளவுஸ் அணிந்துகொண்டே பணத்தைக் கையாள்கிறோம். மேலும், அல்ட்ரா வயலட் என்று சொல்லக்கூடிய இயந்திரம் மூலம் ஸ்கேன் செய்வதால் வைரஸ் இருந்தாலும் அவை அழிந்துவிடும்" என்றார் அச்சத்துடன்.
"பணத்தால் பரவாது என்றால் பிறகு ஏன், லிஃப்டை வெறும் கையால் தொடாதீர்கள், பொது இடங்களில் கைப்பிடிகளைத் தொடாதீர்கள், ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் கிருமி பரவக் கூடும் என்று அரசு அறிவுறுத்துகிறது“ என்று கேட்கிறார் எந்நேரமும் பணத்துடன் புழங்கும் வணிகர் ஒருவர்.
இந்த அச்சங்கள் தொடர்பாகச் சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணனிடம் நாம் விளக்கம் கேட்டபோது, "பணத்தின் மூலம் கரோனா தொற்று பரவும் என்பதற்குச் சரியான சான்றுகள் இல்லை. இருப்பினும், பணம் உள்பட நாம் எதையும் தொட்ட பின் கைகளைச் சுத்தப்படுத்திக்கொள்வது நல்லது" என்றார்.
கரோனா வந்தால் ஏற்படும் உடல் பிணிகளைவிட, அது தொடர்பாகப் பரவும் செய்திகளும், வதந்திகளும் கூடுதல் அச்சத்தை தருவதாகவே உள்ளன. இப்படியான சூழலில், பணம், நாணயம் உள்ளிட்ட எப்பொருளானாலும் பயன்படுத்திய பின் கைகளைச் சுத்தமாகக் கழுவி, பாதுகாப்புடன் இருப்பதே சிறந்த வழியாகும்.
இதையும் படிங்க: கரோனாவை தொடர்ந்து டெங்கு! - அச்சத்தில் மக்கள்!