தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர் கொலைச் சம்பவங்கள் அரங்கேறி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதத்திலிருந்து இதுவரை 5 பெண்கள் உட்பட 18 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலை நகரமாக மாறி வரும் தலைநகரம்
மாங்காடு, கோயம்பேடு, பள்ளிக்கரணை, ஐஸ் ஹவுஸ், திருமங்கலம், திரு.வி.க. நகர், எம்.ஜி.ஆர் நகர், கொடுங்கையூர், காசிமேடு, புளியந்தோப்பு, கொத்தவால்சாவடி, புழல், பூவிருந்தமல்லி, அம்பத்தூர் எஸ்டேட், ஓட்டேரி, வியாசர்பாடி, அண்ணா நகர் ஆகியப் பகுதிகளில் 18 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், பெரும்பாலான கொலைகள் ரவுடிகளின் முன் விரோதத்தின் விளைவாகவும், சில குடும்பத் தகராறு காரணமாகவும் நடந்துள்ளன.
குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதன் பின்னணி
கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் தவறிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ரவுடிகளின் நடமாட்டம் குறித்து நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களும், கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் காவல் துறையினரும் கண்காணிக்காமல் அலட்சியமாக இருப்பதாகவும் கருதப்படுகிறது.
இது மட்டுமின்றி சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளிலும் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், பல ரவுடிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டாலும், கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலை உருவாகியுள்ளதை மறுப்பதற்கில்லை.
காவல் துறையினர் நேரம் வீணடிக்கப்படுகிறதா?
இது தொடர்பாக ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதியிடம் கேட்டபோது, 'குற்றங்கள் அதிகரிப்பதை காவல் துறையினரின் அலட்சியம் என சுருக்கிவிடமுடியாது. தேவையில்லாத போராட்டம், உயர் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம், பந்தோபஸ்து போன்ற பணிகளில் காவல் துறையினர் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களது நேரம் வீணடிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இல்லாமல் இருப்பது குற்றங்கள் அதிகரிக்கக் காரணம்' என்றார்.
தமிழ்நாடு காவல்துறையில் ரவுடிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க பிரத்யேகமாக ரவுடிகள் தடுப்புப்பிரிவு மற்றும் உளவுத்துறையினர் உள்ளதாகத் தெரிவிக்கும் வழக்கறிஞர் கண்ணதாசன், அந்தப் பிரிவினர் முறையாக கண்காணிக்காததால் குற்றங்கள் அதிகரிப்பதாகத் தெரிவிக்கிறார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் இனி எல்லாமே டோர் டெலிவரி!