தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் கரோனா வைரஸ் பரவலால் பெரும் நெருக்கடியான நிலையைச் சந்தித்துவருகின்றன. வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில், தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இச்சூழலில் அடுத்தாண்டு (2021) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. கரோனா பரவல் ஒருபுறம் இருந்தாலும், "சைலண்ட்"ஆக அரசியல் கட்சியினர் தங்களின் தேர்தல் பணிகளை பல கட்டங்களாக மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் இருந்தாலும், பிற கட்சிகளிலிருந்து முக்கிய நிர்வாகிகளை இழுக்கவும், அடிப்படை உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தியும், தங்கள் பலத்தை அதிகரிக்க தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகியுள்ளன. எப்போதும் தேர்தல் நெருங்கும் நேரத்தில், புதிய, துண்டுப் பிரசுரக் கட்சிகள் முளைப்பது, கட்சித் தாவல் போன்ற அரசியல் அக்கப்போர்கள் நடைபெறுவது என்பதைத் தவிர்க்க முடியாது. கரோனா நெருக்கடியிலும், தேர்தலுக்கான அரசியல் நாடகங்கள் தற்போதே தமிழ்நாட்டில் அரங்கேற தொடங்கியுள்ளன. பரவி வரும் கரோனாவால், அரசியல் கட்சியினர் மக்களை நேரடியாக சந்திப்பது என்பது நிகழாத ஒன்று.
ஆகையால், ஆளும், எதிர்க்கட்சிகள் சமூக வலைத்தளங்களில் தங்கள் பிரசாரத்தைத் தொடங்கி தீவிரப்படுத்திவருகின்றனர். அதேபோன்று, ஒவ்வொரு கட்சியிலும் அதிருப்தியில் கட்சி பொறுப்பில் இருக்கும் முக்கிய பிரமுகர்களை ஈர்க்கும் நடவடிக்கைகளிலும் கட்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. மறைந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவே கூட்டணி வைக்கத் தயங்கிய பாஜகவோடு, காலச்சூழலால் கூட்டணி வைத்த அதிமுகவிற்கு மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அளித்தது.
நெருங்கும் தேர்தல் : அதிமுக-பாஜக இடையே விரிசல்?
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு இடத்தில் மட்டுமே வென்றது அதிமுக - பாஜக கூட்டணி. ”பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததே தோல்விக்குக் காரணம்” என வெளிப்படையாகவே பேசி வந்தனர் அதிமுகவினர். இப்படித்தான் இரு கட்சிக்குள்ளும் பல நிகழ்வுகள் முரண்பாடுகளை ஏற்படுத்தி வந்தன. அதோடு மட்டுமல்லாமல், பாஜக நிர்வாகிகள் பலர் அதிமுகவிற்கு தாவி வருவதும், தாவ இருப்பதும் கூட்டணிக் கணக்குகள் மாறுவதையே காட்டுகின்றன.
பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான சீனிவாசன், முதல் நாள் பாஜக மாநிலத் தலைவரோடு ஒன்றாக ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட சூட்டோடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். முக்கிய நிர்வாகி ஒருவருக்கே கூட்டணிக் கட்சியான அதிமுக வலைவீசி இழுத்திருப்பதைக் கண்டு பாஜக தலைவர்கள் அரண்டு போயுள்ளனர்.
கட்சி தாவலில் ஈடுபட்டு வரும் முக்கிய பிரமுகர்கள்...
இது ஒருபுறம் இருக்க, சொந்த ஊர் செல்வாக்கு நிறைந்த பாஜக முக்கிய நிர்வாகிகள் பலர் திமுக பக்கம் வரத் தொடங்கியுள்ளனர். பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசக்குமார், மாநிலப் பொதுச் செயலாளர் வேதாரண்யம் வேதரத்தினம், நாகை மாவட்ட செயலாளர் அமிர்த விஜயகுமார் உள்ளிட்டோர் திமுகவில் கரை ஒதுங்க, திமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமியும், ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினரான கு.க.செல்வமும் பாஜகவில் கரை ஏறியுள்ளனர்.
திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த வி.பி. துரைசாமிக்கு பாஜகவின் துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை ( ஆக.4) திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கு.க .செல்வம், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை டெல்லியில் சந்தித்தார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நான் பாஜகவில் இணையவில்லை என தெரிவித்திருந்தார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த கு.க செல்வம், நேராக மாநில பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு புதன்கிழமை(ஆக.5) சென்றார். விமான நிலையம் மட்டுமின்றி, கமலாலயத்திலும் கு.க.செல்வத்துக்கு காவி துண்டு அணிவித்து உற்சாக வரவேற்பை பாஜக தொண்டர்கள் வழங்கினர். அதைத்தொடர்ந்து, திமுகவில் மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை என்றும், அக்கட்சியில் வாரிசு அரசியல் போய், தற்போது குடும்ப அரசியல் வந்துவிட்டதாகவும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
கு.க.செல்வம் சந்திப்பு குறித்து, பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மகன் , மருமகன் ஆகியோர் மூத்த திமுக நிர்வாகிகளை மதிப்பதில்லை. ஒதுக்குகின்றனர். இன்னும் கு.க.செல்வம் பாஜகவில் இணையவில்லை. அவர், பாஜகவால் ஈர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், நகைச்சுவை நடிகரும், தற்போதைய பாஜக பிரமுகருமாக எஸ்.வி.சேகர், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காட்சிப் பதிவை வெளியிட்டார். அதில், கட்சிப் பெயரிலிருந்து அண்ணா பெயரை நீக்கினால்தான் அடுத்தமுறை அதிமுக ஆட்சிக்கு வரமுடியுமென்று சர்ச்சையாகப் பேசியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ”மான ரோஷம் இருந்தால் அதிமுக கொடியைக் காட்டி சட்டப்பேரவை உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் பெற்ற சம்பளத்தையும், தற்போது பெற்று வரும் பென்ஷனையும் எஸ்.வி.சேகர் திருப்பித் தந்துவிட்டு பேசட்டும் ” எனக் காட்டமாக விமர்சித்தார்.
இந்தவரிசையில், இன்னும் ஒரு படி மேலே சென்ற முதலமைச்சர் பழனிசாமி, “எஸ்.வி.சேகர் என்பவர் யார்? நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின்போது அவர் எங்கே சென்றார்? சும்மா எதையாவது பேசுவது, பிறகு வழக்கு என்று வந்தால் ஓடிப்போய் ஒளிந்து கொள்வது, இதுதான் அவரது வேலை. அதிமுகவில் இருந்தபோது சரியான முறையில் அவர் ஒத்துழைக்காததால், கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை “ என்றார். இந்நிகழ்வுகள் அனைத்தும் தனிப்பட்ட பிரச்னைகளாக இல்லாமல், சில நாட்களாகவே அதிமுக - பாஜக இடையே உள்ள விரிசல்களையே வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
உங்கள் ஃபைல் எங்களிடம் இருக்கிறது’ என்று எஸ்.வி.சேகர் வெளிப்படையாகவே மிரட்டல் விடுக்கும் போது, அதிமுகவின் எதிர்வினை முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. இச்சம்பவங்களை பார்க்கும் போது, பாஜக எதிர்ப்பு அரசியலை அதிமுக கையில் எடுக்க தொடங்கிவிட்டது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். கடந்த 2016ஆம் ஆண்டு 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, இரண்டாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தார் ஜெயலலிதா.
அப்போது நீட், ஜிஎஸ்டி, உதய் மின் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு சிகப்புக் கொடி காட்டியவர் ஜெயலலிதா. ஆனால், அவரது மறைவுக்குப் பின்னர், எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு, நீட் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் பாஜகவுக்கு மறைமுகமாக பச்சைக் கொடி காட்டியது. அன்று தொடங்கி, இன்றுவரை தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு எழுந்த எதிர் குரல்களுக்குச் செவிசாய்க்காமல், ஆதரவுக் கரம் நீட்டியது அதிமுக தொண்டர்களாலேயே மறுக்க முடியாது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு, அதிமுக ஆதரவு இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதிய நிலையில், திடீர் திருப்பமாக இரு கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல்கள் நடைபெற்றுவருவது, அதிமுக- பாஜக கூட்டணி அரசியலில் விரிசல் ஏற்பட துவங்கி உள்ளது என்பதை மறைமுகமாகக் காட்டுகிறது.
அண்மையில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில், மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது என்றும், புதிய கல்வி கொள்கையின் பிற அம்சங்கள் குறித்து ஆராய வல்லுநர் குழு அமைக்கப்படுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருப்பது, பாஜக அதிமுக இடையேயான முரண்பாடுகளை மேலும் பெரிதாக்கியுள்ளது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால் மக்களவைத் தேர்தலில் பெரும் தோல்வியைக் கொடுத்த பாஜகவுடனான கூட்டணியை முடிவுக்கு கொண்டு வரும் முடிவிலேயே அதிமுக இருப்பதாகத் தெரிகிறது. இவற்றை வைத்து பார்க்கும் போது, பாஜக எதிர்ப்பு அரசியலை அதிமுக கையிலெடுக்க தொடங்கியுள்ளது.
தேர்தலுக்கு முன்னரே கருத்து மோதல் வாயிலாக கூட்டணியில் இருக்கும் விரிசலை வெளிக்காட்டும் அரசியல் கட்சிகள், ஒவ்வொரு கட்சியிலும் அதிருப்தியில் இருக்கும் நபர்களை தங்கள் பக்கம் இழுக்கும் போரையும் தொடர்ந்து தீவிரப்படுத்திவருகின்றனர்.
பாஜகவில் அங்கம் வகிப்பவரும், முன்னாள் அதிமுக பிரமுகருமான நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் ”அப்படி ஏதும் இதுவரை நிகழவில்லை, ஆனால் விரைவில் நிகழலாம்” என்கின்றனர் அவரது நெருங்கிய தொடர்புகள். அதேபோன்று இன்னும் சில மூத்த பாஜக நிர்வாகிகள் திமுக, அதிமுகவில் இணையவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்தியில் ஆட்சியில் இருந்தாலும், செல்வாக்கு வளர மறுப்பதால் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நெருங்க, நெருங்க பாஜகவிலிருந்து அதிருப்தியாளர்கள் பலரையும் இரு திராவிடக் கட்சிகள் இழுக்க, அல்லது அக்கட்சிகளில் இணைய வாய்ப்புகள் அதிகமுள்ளதாகவே தெரிகிறது.
இதையும் படிங்க: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!