சென்னை: நீலகிரி மாவட்ட இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மாணவர் சி.மணிகண்டன். இவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத் துணைவேந்தர், மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோருக்கு ஜூன் 22ஆம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கல்லூரி உரிமையாளரின் உதவியால்...
அந்த கடிதத்தில், 'நான் 2011ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பில் 1074 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். அரசு ஒதுக்கீட்டின்கீழ் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன். பின்னர், கல்லூரி கட்டணத்திற்காக உதவி கேட்டதையடுத்து, அந்த கல்லூரியின் உரிமையாளர் இலவசமாக படிக்கும்படி வாய்மொழியாக வாக்களித்தார். ஆனால் அவரின் மறைவிற்கு பிறகு, கல்லூரி நிர்வாகம் மாற்றமடைந்ததால் என்னிடம் கல்லூரி கட்டணத்தைச் செலுத்தும்படி வலியுறுத்தினர்.
கல்வி உதவித்தொகை
அதன்பின்னர், நீலகிரி ஆட்சியரிடம் மனு அளித்து, அவரின் பரிந்துரையின் பேரில் தனியார் வங்கி எனக்கு ரூ.7.5 லட்சம் கடனுதவி அளித்தது. அதில் 6.5 லட்சம் ரூபாயை கல்லூரியில் செலுத்திவிட்டேன். பின்னர், அரசால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையில் இரண்டு வருடத்திற்கான உதவித் தொகையை பெற்றேன். அதிலும், ஒரு வருடத்திற்கான தொகையை கல்லூரியில் செலுத்திவிட்டேன். இரண்டாம் வருடத்திற்கான தொகையை செலுத்தும் சமயத்தில் எனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பாதியில் நின்ற படிப்பு
அப்போது, வேறு வழியில்லாமல் என்னுடைய கல்வி உதவித்தொகையை அவரின் மருத்துவ செலவிற்காக பயன்படுத்திவிட்டேன். ஆகையால், கல்லூரி கட்டணத்தை என்னால் செலுத்த முடியவில்லை.
என்னுடைய கல்லூரி படிப்பின் மூன்றாம் ஆண்டில் (2017) குடும்பம் மிகுந்த வறுமையில் போராடியதால், நான் என்னுடைய மருத்துவ படிப்பை பாதிலேயே நிறுத்திவிட்டேன்.
தாயாரின் கடைசி ஆசை
மருத்துவப் படிப்பை பாதிலேயே நிறுத்திவிட்டதால், பெற்றோருடன் சேர்ந்து கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். இதன் நடுவே எனது தாயாரும் யானை தாக்கி இறந்துவிட்டார். அவரின் கடைசி விருப்பமே நான் மருத்துவர் ஆக வேண்டும் என்பதுதான்.
மருத்துவ படிப்பை தொடர்வதில் நானும் ஆர்வமுடன் இருக்கிறேன். இதனால், எனது மருத்துவ படிப்பை தொடர கல்லூரி கட்டணம், விடுதி கட்டணம் வழங்கி உதவுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
இவருடன் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள் எல்லாம் மருத்துவர்கள் ஆகிவிட்ட நிலையில், இவர் மட்டும் கூலித் தொழிலாளியாகிவிட்டார். தற்பொழுது தனியார் நிறுவனம் மூலம் செக்கியூரிட்டி வேலை செய்து வரும் இவரின் லட்சியத்திற்குத் தடையாக வறுமை உள்ளது.