மத்திய அரசின் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை, டாடாவின் டாலேஸ் நிறுவனத்துக்கு 18 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்வதாக கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இம்மாத இறுதிக்குள் ஏர் இந்தியா நிறுவனம் முழுமையாக டாடா வசம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்காமல் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு வழங்கத் தடைவிதிக்கக் கோரி, ஏர் இந்தியா ஊழியர்கள் தொழிற்சங்கமான ஏர் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சங்கம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், தொழிற்சங்கங்களுடன் கலந்துபேசாமல் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டதாகவும், விற்பனை செய்தாலும், ஓய்வுபெறும் வயது வரை ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், ஏர் இந்தியா குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றக் கூடாது, மருத்துவச் சலுகைகள் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி அரசுக்கு மனு அனுப்பியதாகக் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், ஓராண்டுக்கு மட்டுமே பணி பாதுகாப்பு வழங்க முடியும் என மத்திய விமான போக்குவரத்துத் துறைச் செயலர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவை வாங்கும் டாடா நிறுவனம், தற்போதைய ஊழியர்களை தக்கவைத்துக் கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், ஏர் இந்தியா காலனிகளில் உள்ள குடியிருப்புகளை காலிசெய்வது தொடர்பாக ஊழியர்களிடம் உத்தரவாதம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதனால் காலனிகளிலிருந்து தங்களை வெளியேற்றவும், மருத்துவச் சலுகைகளை நிறுத்தவும் தடைவிதிக்கக் கோரியுள்ளது. ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்காமல் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்கும் நடைமுறைகளுக்குத் தடைவிதிக்கவும் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், ஏர் இந்தியா காலனிகளில் வசிக்கும் ஊழியர்களை வெளியேற்றவும், மருத்துவச் சலுகைகளை நிறுத்தவும் தடைவிதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு ஜனவரி 7ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, மத்திய அரசு, ஏர் இந்தியா, டாடா நிறுவ்னங்களுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: லீனா மணிமேகலை பாஸ்போர்ட் முடக்கிய உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்!