கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கார்த்திகேயன் என்பவருக்கும், அவருடன் வேலை பார்த்து வந்த சக்தி தமிழினி என்பவருக்கும் கடந்த ஐந்தாம் தேதி சாதி மறுப்புத் திருமணம் நடைபெற்றது.
இவர்களின் காதல் திருமணத்திற்கு சக்தியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி தங்கள் வீட்டில் இருந்த கார்த்திகேயனும் அவருடைய தாயும் தாக்கப்பட்டு, சக்தி கடத்தப்பட்டார்.
தொடர்ந்து, சக்தியை மீட்டுத்தரக் கோரி துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்திகேயன் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், சக்தியின் தந்தை அடியாட்களைக் கொண்டு தன்னையும், தன் தாயையும் தாக்கி, சக்தியை கடத்திச் சென்றதாகவும், தற்போது சக்திக்கு வேறு திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர் முயற்சித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், தனி அறையில் அடைக்கப்படுள்ள தன் மனைவியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரை உடனே மீட்டுத் தர காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு காவல் துறையினர் உரிய பாதுகாப்பும், இணைய அனுமதி சீட்டு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், ஒரு வார காலத்திற்குள் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணை கோயம்புத்தூர் ஒன்றாவது நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்த வேண்டும் என்றும், அப்போது வேறு யாரையும் நீதிமன்றத்தின் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்றும், நீதிபதி எந்தவொரு தலையீட்டிற்கும் உட்படால் நியாயமான முறையில் வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : உடுமலை சங்கர் வழக்கின் தீர்ப்பு கவலையளிக்கிறது - தீண்டாமை ஒழிப்பு முன்னணி