சென்னை: ராயபுரம் தங்க சாலை பகுதியில் 11ஆவது மெகா தடுப்பூசி முகாமினை மா. சுப்பிரமணியன் ஆய்வுமேற்கொண்டார். அங்கு தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் மா. சுப்பிரமணியனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் ஐட்ரிம்ஸ் மூர்த்தி, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளரிடம் மா. சுப்பிரமணியன் பேசுகையில், ”மெகா தடுப்பூசி முகாம் மூலம் சென்னையில் இன்று இரண்டு லட்சம் பேருக்குத் தடுப்பூசியைச் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
72 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த கால அவகாசம் முடிந்து காத்திருக்கின்றனர். இரண்டாவது, முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
மேலும், “60 நாள்களாக கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில் நேற்று கரோனா தொற்று உயர்ந்துள்ளது. தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதே கரோனா தொற்று உயர்வுக்கு காரணம். எனவே தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்” என வலியுறுத்தினார்.
”கடந்த ஏழு நாள்களில் சிங்கப்பூரில் 14 ஆயிரம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 74 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஏழு நாள்களில் இங்கிலாந்தில் 75 விழுக்காட்டினர் தடுப்பூசியைச் செலுத்தியுள்ளனர். ஆனால் 2.84 லட்சம் பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 1,029 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஸ்யாவில் 44 விழுக்காட்டினர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். கடந்த ஏழு நாள்களில் 2.57 லட்சம் பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 8,739 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டில் 30 விழுக்காட்டினர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
அதில் 1.11 லட்சம் பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 4,451 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், தடுப்பூசி போடாத நாடுகளில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது” என ஆய்வு தெரிவிப்பதாகப் புள்ளி விவரங்களை விவரித்தார் மா. சுப்பிரமணியன்.
தொடர்ச்சியாக சென்னையில் குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்கள், நடுத்தர வர்க்க மக்களிடம் முகக்கவசம் அணியும் பழக்கம் குறைந்துள்ளதாக வேதனை தெரிவித்தார். ஆறுதல் அளிக்கும்விதமாக மால்களில் முகக்கவசம் அணிவோரின் விழுக்காடு 51 ஆக இருப்பதாகவும் கூறினார்.
பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்கப்படுத்தும்விதமாகத் தான் திரையரங்குகளில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதாகவும், படத் தயாரிப்பாளர் சொல்வதுபோல் குறிப்பிட்ட திரைப்படம் வெளியாவதால் இவ்வாறு அறிக்கை வெளியிடவில்லை எனவும் விளக்கமளித்தார்.
மேலும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதால்தான் கமல் ஹாசனுக்கு கரோனா தொற்று உறுதியான போதிலும் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
இதையும் படிங்க:RAIN UPDATE LIVE: வானிலை ஆய்வு மைய இயக்குநர் செய்தியாளர் சந்திப்பு