கோவையில், 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத நல்லிணக்கத்துக்காகவும், ஒருமைப்பாட்டுக்காகவும் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில், தேசியக்கொடி பொறிக்கப்பட்டிருந்த கேக்கை வெட்டி உண்டதாகக் கூறி, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அப்போதைய மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், காவல் துணை ஆணையர் பர்வேஷ் குமார் ஆகியோருக்கு எதிராக இந்து பொது கட்சியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கோவை நீதிமன்றத்தில் புகார் மனுவைத் தாக்கல்செய்தார்.
இந்த மனுவை விசாரித்த கோவை நடுவர் நீதிமன்றம், ஆட்சியர், துணை ஆணையர் மீது தேசியக்கொடியை அவமதித்ததாக வழக்குப்பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது. பத்திரிகைச் செய்தி அடிப்படையில் புகார் மனு தாக்கல்செய்யப்பட்டதாகவும், அரசு ஊழியர்கள் மீது அரசின் முன் அனுமதியின்றி வழக்குத் தொடரும்படி உத்தரவு பிறப்பித்திருக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சம்பவத்தின் நேரடி சாட்சியாக இல்லாத, புகார்தாரரான செந்தில்குமார், பத்திரிகைச் செய்தி அடிப்படையில் அளித்த புகாரின்கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, கோவை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து உத்தரவிட்டார்.
சுதந்திர தினம், குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்பவர்கள், தேசியக்கொடியை சட்டையில் அணிவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, நிகழ்ச்சி முடிந்தபின் கொடியை அணிந்திருக்க மாட்டார்கள்.
இதை தேசியக்கொடியை அவமதித்ததாகக் கருத முடியாது எனவும், அப்படிக் கருதினால், தேசியக்கொடியை கையாள தயக்கம் காட்டுவர் எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.