சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து பெங்களூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று பகல் ஒரு மணிக்கு புறப்பட இருந்தது. அந்த விமானத்தின் மூலம் பெங்களூரு செல்வதற்காக சென்னையைச் சேர்ந்த அங்கிட் குமார் சின்ஹா என்ற பயணி வந்தார். விமானம் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக பகல் 12 மணிக்கே வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனாலும் அவர் தாமதமாக வந்துவிட்டதாக கூறி, இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர்கள் அவரை விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை. அதேபோல் அந்த விமானத்தில் உடல் நல பாதிப்புடன் பயணிக்க வந்த மற்றொரு பயணியையும் அனுமதிக்கவில்லை. அந்த பயணி இந்த விமானத்தின் மூலம் பெங்களூரு வழியாக ராஞ்சிக்கு செல்ல வந்திருந்தார்.
இந்த இரண்டு பயணிகளும் சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் கவுண்டரில் உள்ள ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர். 25 நிமிடங்களுக்கு முன்புதான் கவுண்டர் மூடப்படும் என போா்டிங் பாசில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஒரு மணி நேரத்திற்கு முன்பு வந்தும் ஏன் தங்களை அனுமதிக்கவில்லை என்று கேட்டு பயணிகள் வாக்குவாதம் செய்தனர். ஆனால், இண்டிகோ ஊழியா்கள் உறுதியாக மறுத்துவிட்டதால், பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக பயணி அன்கிட் குமார் சின்ஹா தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதற்கு பதிலளித்த இண்டிகோ விமான நிறுவனம், "உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்துக்கு வருந்துகிறோம். இது சம்பந்தமாக ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்படும். உங்களுடைய கருத்தை நிறுவனத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தது.
தாங்கள் விமானத்தை தவற விட்டுவிட்டோம், இனி நீங்கள் நடவடிக்கை எடுத்தாலும் பயனில்லை, உங்களுடைய ஊழியர்களின் கடுமையான நடவடிக்கையே இதற்கு காரணம் என்று அங்கிட் குமார் மீண்டும் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், தனக்கு நேர்ந்த இந்த அனுபவம் பற்றி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம், சென்னை விமான நிலைய இயக்குநர், இண்டிகோ ஏர்லைன்ஸ் உயர் அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜம்முவில் 150 அடி ஆழ பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து