ஐபிஎல் 2021 இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
2010, 2011, 2018ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, தோனி தலைமையிலான (MS Dhoni) சென்னை அணி இந்தாண்டு நான்காவது முறையாக கோப்பையை வென்றுள்ளது.
ஐபிஎல் கோப்பை சென்னை வந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் நிர்வாகக் குழு சார்பில் கோப்பையை தியாகராய நகரிலுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயிலில் வைத்து பூஜை செய்தனர்.
அதன்பின்னர், சென்னை அணியின் உரிமையாளரும், இந்தியா சிமென்ட்ஸ் (India Cements) நிர்வாக இயக்குநருமான ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், 'சென்னை அணியின் வெற்றியைத் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். தோனியின் (MS Dhoni) கையால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கோப்பை வழங்கப்படும்' என்று தெரிவித்தார்.
நான்காவது முறையாக சிஎஸ்கே அணி கோப்பையை வென்ற போது முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin) தனது ட்விட்டரில், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை கொண்டாட சென்னை அன்புடன் காத்திருக்கிறது, மகேந்திர சிங் தோனி (MS Dhoni)" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin) தலைமையில், சிஎஸ்கே அணி கேப்டன் தோனி தலைமையிலான அணியிருக்குப் பாராட்டு விழாவை நவம்பர் 20ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு ஸ்ரீனிவாசன், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துப் பாராட்டு விழாவில் கலந்துகொள்ளுமாறு கூறி நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினார்.
இதையும் படிங்க: தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை - சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன்