தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. மே 21ஆம் தேதி அதிகபட்ச பாதிப்பாக 36 ஆயிரத்து 184 ஆக இருந்தது.
அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகள் காரணமாக தற்போது வைரஸ் பாதிப்பு 2,505 ஆக குறைந்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துவிட்டது. இதனால் இயல்புநிலை திரும்பிவருகிறது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக விமான சேவைகள் பெருமளவு குறைந்திருந்தன. ஒரு நாளைக்கு 60 லிருந்து 70 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
அந்த விமானங்களில் சுமாா் இரண்டாயிரத்திலிருந்து மூன்றாயிரம் பயணிகள் மட்டுமே பயணித்தனா். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல், நாள்தோறும் 90 விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டுவந்தன.
இந்நிலையில் கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் கடந்த ஜூன் மாதத்திலிருந்து பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் மே மாதம் கடைசி வாரத்தில் புறப்பாடு விமானங்கள் 40, வருகை விமானங்கள் 40 என மொத்தம் 80 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
அதில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோா் பயணித்தனா். இம்மாதம் ஜூலை முதல் வாரத்திலிருந்து அது மேலும் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு நாளைக்கு சுமாா் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோா் பயணிக்கின்றனா்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வருகை விமானங்கள் 69 ஆகவும் புறப்பாடு விமானங்கள் 67 ஆகவும், மொத்தம் 136 விமானங்களில் 15 ஆயிரத்து 800-க்கும் அதிகமான பயணிகள் பயணிக்கின்றனா்.
அதைப்போல் டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை ஆகிய பெருநகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.