சென்னை: காருண்யா பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்தாரா? என்பது குறித்து வருமான வரித்துறை அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
அடையாறு ஜீவரத்தினம் நகரில் உள்ள பால் தினகரன் வீடு, அடையாறு, பாரிமுனையில் உள்ள "இயேசு அழைக்கிறார்" ஜெப கூட அலுவலகங்கள், தாம்பரத்தில் உள்ள சீசாஅறக்கட்டளை அலுவலகத்திலும் மூன்றாவது நாளாக வருமானவரித்துறை அலுவலர்கள் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
‘இயேசு அழைக்கிறார்’ அமைப்பில், வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சோதனை நடத்தி வருகின்றனர். அறக்கட்டளைக்கு வந்த நிதியை விட, செலவு செய்த தொகைக்கு, அதிகம் கணக்கு காட்டப்படுவதாக புகார்கள் தொடர்பான சோதனையின் போது ஆவணங்ளை கைப்பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், அறக்கட்டளைக்காக வழங்கப்பட்ட நிதியை, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் முதலீடு செய்ததும், சோதனையில் தெரிய வந்துள்ளது. ஆவணங்களும், பண பரிவர்த்தனை ரசீதுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அலுவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
அதேசமயம் ஹார்டு டிஸ்க், பென்டிரைவ், வங்கி தொடர்பான பரிவர்த்தனை ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதுடன் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை வருமானவரித்துறை அலுவலர்கள் உறுதிப்படுத்தவில்லை. சோதனை முடிந்த பிறகு தான் தெரிவிக்கப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
பால் தினகரனின் ஆடிட்டர்களின் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பால் தினகரன், வெளிநாட்டில் இருப்பதால், அவரை சென்னைக்கு வரவழைத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இயேசு அழைக்கிறார் அமைப்பிற்கு சமீபத்தில் அதிகளவில் இந்திய முதலீடுகள் வந்திருப்பதை அலுவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது தொடர்பாக சோதனை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: இயேசு அழைக்கிறார் டிரஸ்டிற்கு வந்த வெளிநாட்டு முதலீடுகள்!