அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரூ.300 கோடியைத் தாண்டி வசூல் செய்ததாகவும் அதற்கு உரிய வருமானவரிச் செலுத்தவில்லை என்று கூறி நடிகர் விஜய், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், அன்பு செழியனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்பட 38 இடங்களில் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கணக்கில் காட்டப்படாத 77 கோடி ரூபாய் ரொக்கம், சொத்து ஆவணங்கள், தங்கம் ஆகியவற்றைப் பறிமுதல்செய்தனர். மேலும் ஃபைனான்சியர் அன்பு செழியன், 165 கோடி ரூபாய் வருவாய் ஏய்ப்பு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அன்பு செழியன், விஜய் ஆடிட்டர், சி.இ.ஓ. அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் வருமானவரித் துறை அலுவலகத்தில் முன்னிலையாகி விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், தற்போது விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் சம்பளம் தொடர்பான கோப்புகளை வருமானவரித் துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக, மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமாருக்குச் சொந்தமான சைதாப்பேட்டையில் உள்ள வீட்டில் கடந்த திங்கள்கிழமையன்று வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, சென்னை பனையூரில் உள்ள விஜய் வீட்டில் வருமானவரித் துறையினர் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். முன்னதாக, நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், கோப்புகளை விஜய்யின் வீட்டில் உள்ள அறையில் வைத்து சீலிட்டுச் சென்றனர். அதன்பின் இன்று அந்தச் சீலை உடைத்த அலுவலர்கள், ஆவணங்களைச் சரிப்பார்த்து கோப்புகளை ஆய்வுசெய்து அலுவலகத்துக்கு கொண்டுசென்றனர்.
இதையும் படிங்க: மீன் சாப்பிட்டால் நூறாண்டுகள் வாழலாம் - அமைச்சர் ஜெயக்குமார்