இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அனைத்துத் தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்திக் கூறியதாவது:
”அண்ணா பல்கலைக்கழகத்தின் நவம்பர் 2019 பொறியியல் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள், மாவட்ட வாரியாக, மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, கடந்தாண்டு நவம்பர் 28ஆம் தேதி முதல் நடைபெற்றன. இந்தப் பணியில் ஒரு மண்டலத்திற்கு 500 முதல் 1000 ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
இதில் ஒரு ஆசிரியர் நாள் ஒன்றுக்கு 1200 ரூபாய் முதல் 1400 ரூபாய் வரை என, 5 முதல் 8 நாட்களுக்கு, சராசரியாக 5000 ரூபாய் ஊதியம் பெற முடியும். இந்நிலையில் சென்னை மற்றும் சுற்றுப்புற மண்டலங்களைத் தவிர்த்து, ஏனைய மாவட்டங்களில், ஆசிரியர் பெறும் இந்த சிறிய ஊதியத்தில் 10 விழுக்காடு வரியாக, அண்ணா பல்கலைக்கழகத்தால் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு வருமானவரித்துறையில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், பிடித்தம் செய்தத் தொகையை அரசிற்கு கட்டி விட்டு, அதற்கான படிவத்தினை அளிக்க வேண்டும்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் கடந்த நவம்பர், டிசம்பர் மாதம் 23 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டவர்களிடம் பிடித்தம் செய்த தொகையை செலுத்தி, அவர்களுக்கான படிவங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பணிகளை முடித்து வரும் 13 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் ” என அந்த அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாக கார்த்திக் கூறினார்.
இதையும் படிங்க: 29 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல்?