சென்னை: தமிழ்நாடு, பாண்டிச்சேரி திருப்பதி தேவஸ்தானத்தின் ஆலோசகர்கள் குழுவின் துணைத்தலைவர்கள், உறுப்பினர்கள் பதவியேற்பு விழா சென்னை தியாகராயநகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கட்டடத்தில் நடைபெற்றது.
திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் சுப்பா ரெட்டி, தமிழ்நாடு திருப்பதி தேவஸ்தானத்தலைவர் ராஜசேகர் ரெட்டி ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் 25 பேர் உறுப்பினர்களாக பதவியேற்றனர். அவர்களில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி எம்பி-யுமான கதிர் ஆனந்த்தும் துணைத்தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி தேவஸ்தானத் தலைவர் சுப்பா ரெட்டி, நிர்வாகி சேகர் ரெட்டி ஆகியோர் கூறும்போது, "கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றால் கோயிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பக்தர்களின் வேண்டுதலால் கரோனா தொற்று குறைந்துள்ளது.
இன்னும் இரண்டு மாத காலத்தில் திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு கரோனா வழிமுறை கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். தற்பொழுது தினமும் பதிவு செய்யாத பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் சென்னை - தியாகராயநகரில் பத்மாவதி அம்மாள் கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகள் வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
அதேபோல் உளுந்தூர்பேட்டையில் திருப்பதி தேவஸ்தான கோயில் கட்டுவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதற்கான பூமி பூஜை போடப்பட்டு இருந்தாலும், கரோனா தொற்றினால் காலதாமதம் ஆனது. இந்தப் பணிகளும் விரைவில் தொடங்கப்படும்.
திருப்பதி தேவஸ்தான மண்டபத்தில் குறைந்த வாடகை
மதுரையில் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் இடத்தில் கோயில் கட்டடுவதற்கும் திட்டமிட்டுள்ளோம். சென்னை ராயப்பேட்டையில் திருப்பதி தேவஸ்தானத்திற்குச் சொந்தமான 1.5 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு கல்யாண மண்டபம் கட்டப்பட உள்ளது. இந்த மண்டபம் குறைந்த வாடகையில் அளிக்கப்பட உள்ளது.
புரட்டாசி மாதத்தில் மட்டும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து ஒரு நாளைக்கு 10,000 பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இளைப்பாற மண்டபங்கள் கட்டித்தரப்படவுள்ளது. ஊத்துக்கோட்டை, சித்தமஞ்சேரி ஆகிய இரண்டு இடங்களில் வேலை நடக்கிறது.
சென்னை, தியாகராயநகரில் கோயில் கட்டப்பட வேண்டும் என பக்தர்கள் விரும்புகின்றனர். அதற்கான இடம் தேடிக்கொண்டு இருக்கிறோம்.
சென்னையில் இடம் கிடைத்தால் நூறு கோடி மதிப்பில் வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் கட்டப்பட உள்ளது. மேலும் ஏற்கெனவே கடந்த ஆட்சியின் போது முதலமைச்சரிடம் கோயில் கட்டுவதற்கு ஈசிஆர், ஒஎம்ஆர் சாலையில் இடம் பார்த்து அளித்திருந்தோம். அந்த இடங்களை ஒதுக்கித்தர வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அந்த இடம் கிடைத்தால் அடுத்தாண்டு கோயில் கட்டுவது குறித்து அறிவிக்கப்படும்.
திருப்பதி தேவஸ்தானத்தின் கல்யாண உற்சவம் கன்னியாகுமரி, சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை அழைப்போம். கடந்த ஆறு ஆண்டிற்கு முன்னர் உற்சவம் நடத்தப்பட்டது. இந்தாண்டு தமிழ்நாடு முதலமைச்சர் தரும் தேதியில் கல்யாண உற்சவம் நடத்தப்படும்.
ஜம்மு காஷ்மீரில் அரசு வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் கட்ட அரசு 66 ஏக்கர் நிலம் வழங்கி உள்ளது. விரைவில் வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வளையோசை கலகலவென.. காலத்துக்கும் ஒலிக்கும் லதா மங்கேஷ்கர் குரல்!