சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய மொடக்குறிச்சி உறுப்பினர் வே.பொ. சிவசுப்பிரமணி, சிவகிரி பகுதியில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க அரசு முன்வருமா என்று கேட்டார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல், ” மொடக்குறிச்சி பகுதியில் தற்போது இரண்டு அரசு, 16 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. அதில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மூன்றாயிரத்து 747 இடங்களில் ஆயிரத்து 652 இடங்கள் காலியாக உள்ளன.
தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 விழுக்காடு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி 278 இடங்களில் 111 காலியாக உள்ளன. ஆதலால் சிவகிரிப் பகுதியில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டிய தேவையில்லை.
மேலும் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க மூன்று ஏக்கர் நிலம் தேவைப்படும். புதிய கருவிகள், உபகரணங்கள் கொள்முதல் செய்ய 100 கோடி செலவாகும்” எனத் தெரிவித்தார்.
மீண்டும் கேள்வி எழுப்பிய உறுப்பினர் வே.பொ. சிவசுப்பிரமணி, தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கத் தேவைப்படும் புதிய கருவிகள், உபகரணங்கள் உள்ளிட்டவற்றை மக்களே கொடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர், அப்பகுதியில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க துறை ரீதியாக ஆய்வுசெய்து பரிசீலிக்கப்படும் எனக் கூறினார்.
இதையும் படிங்க: கரோனாவிற்கு மருந்து: விரைவில் நல்ல செய்தி வரும் என்கிறார் விஜய பாஸ்கர்!