கடந்த 2016 நவம்பர் மாதம் 500, 1,000 ரூபாய் கரன்சிகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிலான கரன்சிகளைப் பயன்படுத்தி, சொத்துகளை வாங்கியதாக, சசிகலா மீது வருமானவரித் துறை குற்றம் சாட்டியது.
இதுபோல் 130 கோடி ரூபாய் மதிப்பிலான மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகளைப் பயன்படுத்தி வாங்கப்பட் சென்னை பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால்-ஐ வாங்கிய விவகாரம் தொடர்பாக மாலின் உரிமையாளர்கள் கங்கா பவுண்டேஷன், பாலாஜி, விஎஸ்ஜே தினகரன் ஆகியோர் மீது வருமானவரித் துறையினர், பினாமி சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்தனர்.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகளைப் பெற்று மால்-ஐ விற்பனை செய்ததற்காக தங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. நிர்பந்தத்தின் அடிப்படையிலேயே ஸ்பெக்ட்ரம் மால்-ஐ விற்பனை செய்துள்ளதால் தங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தைப் பயன்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வருமானவரித் துறை சார்பில் முன்னிலையான மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், கடும் நிதி நெருக்கடி காரணமாக ஸ்பெக்ட்ரம் மால்-ஐ விற்பனை செய்ய உரிமையாளர்கள் முடிவு செய்ததாகவும், அதற்காக அவர்கள் மனை வணிக முகவர் (ரியல் எஸ்டேட் ஏஜெண்ட்) மூலம் சசிகலாவின் வழக்கறிஞரை அணுகியதாகவும், இந்தச் சந்திப்பு பண மதிப்பிழப்புக்கு முன் நடந்ததாகவும் குறிப்பிட்டார்.
ஸ்பெக்ட்ரம் மாலுக்கான தொகையை உரிமையாளர்களுக்கு வழங்க மேற்கொண்ட நடைமுறை, வாங்குபவரின் பெயர் இல்லாமல் ஒப்பந்தங்கள் மேற்கொண்டது போன்ற நடவடிக்கைகள் காரணமாக, பினாமி சட்டத்தைப் பயன்படுத்தியது சரியே எனவும் வாதிட்டார். அவரது வாதம் முடிவடையாததை அடுத்து, வழக்கின் விசாரணையை நீதிபதி பிப்ரவரி 11ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க...எங்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் - மன்னர் திருமலை நாயக்கரின் 15-ஆம் வாரிசு அசோக் ராஜா