சென்னை: தேசிய மருத்துவ ஆணையம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்ககான கலந்தாய்வு , மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு முதல் சுற்றுக் கலந்தாய்வு அக்.11ஆம் தேதி 20ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. வரும் 28ஆம் தேதிக்குள் மாணவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
மாநில அளவில் அக்.17 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. வரும் நவ.4ஆம் தேதிக்குள் மாணவர்கள் கல்லூரியில் சேர வேண்டும். 2ஆம் சுற்றுக்கலந்தாய்வு வரும் நவ.2ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையில் நடைபெற்று, மாணவர்கள் 18ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். மாநில அளவில் நவ.7ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையில் நடைபெற்று, 21ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும்.
இதனைத்தொடர்ந்து, மாப் ஆப் ரவுண்ட் கலந்தாய்வும், ஸ்டே வேகன்சி கலந்தாய்வும் நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் நவ.15 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக்கல்லூரிகள் 57-ல் எம்பிபிஎஸ் படிப்பில் 8,225 இடங்கள் உள்ளன. அவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 848 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
அதேபோல், பிடிஎஸ் படிப்பில் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகள் 22-ல் 2,160 இடங்கள் உள்ளன அவற்றில் 30 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட பிற மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கும் இந்த கலந்தாய்வு மூலம் விண்ணப்பித்து இடங்களை தேர்வு செய்யலாம். இந்த இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் நீட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் இடம் ஒதுக்கப்படுவதால், அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள இடங்களை மாணவர்கள் எளிதாக தேர்வு செய்ய முடியும். இறுதியாக, இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர இன்று (அக்.11) முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு எப்போது? அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்