சென்னை: கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செப். 13) நடைபெற்ற அரசு துறைச் செயலாளர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று அவர் உரையாற்றினார்.
அப்போது பேசியவர், “அனைத்துத் துறையும் வளர்ச்சி என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம் என்பதை நீங்கள் எல்லாம் நன்றாக அறிவீர்கள். அத்தகைய சிந்தனையுடன் தான் திட்டங்களை நாம் தீட்டி வருகிறோம். திமுகவின் தேர்தல் அறிக்கையில் என்னென்ன சொல்லியிருக்கிறோம். அதேபோல, மாவட்டங்களுக்கென தனியாக தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கைகள்.
இவற்றை முதல் கட்ட அடிப்படையாகக்கொண்டு திட்டங்களை நாம் தீட்டினோம். அடுத்தகட்டமாக அமைச்சர்கள், செயலாளர்கள் உடனான கலந்துரையாடல்கள் மூலமாகப் பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன்பிறகு, சட்டமன்றக் கூட்டத்தொடரில் அவர்கள் வைக்கக்கூடிய கோரிக்கைகளின் அடிப்படையில் சில திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
அரசின் சார்பில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு மூலமாக பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கைகளின் அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்பட்டன. இப்படி பல்வேறு வழிமுறைகளில் திட்டங்கள் பிறந்திருந்தாலும், அதனை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும், அமைச்சர்களுக்கும், துறையைச் சார்ந்திருக்கக்கூடிய செயலாளர்களுக்கும் தான் இருக்கிறது.
விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்: 2021-22ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 1,680 அறிவிப்புகளில் 100 அறிவிப்புகள் நீங்கலாக, 1,580 அறிவிப்புகளுக்கு உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு, ஏறக்குறைய 94 விழுக்காடு அறிவிப்புகள் செயலாக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
2022-23ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 1,634 அறிவிப்புகளில், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஆய்வின்போது, 23 விழுக்காடு அறிவிப்புகளுக்கு மட்டுமே அரசாணைகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, செப்டம்பர் 12 அன்றைய நிலவரப்படி பார்த்தீர்கள் என்றால், ஏறக்குறைய 57 விழுக்காடு அறிவிப்புகளுக்கு அதாவது 937 அறிவிப்புகளுக்கு உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு, செயலாக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
மீதமுள்ள அறிவிப்புகளுக்குரிய ஆணைகளுக்கு அக்டோபர் மாதம் 15ஆம் தேதிக்குள் வெளியிடக்கூடிய வகையில் செயல்படவேண்டும். சில திட்டங்களை அறிவிக்கிறோம், ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதில் தேவையற்ற காலதாமதம் ஆகிறது. இத்தகைய காலதாமதம் தவிர்க்கப்பட்ட வேண்டும். சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்பது உண்மை தான். அதற்காக சிந்தித்துக்கொண்டே இருந்து விடக்கூடாது.
விமர்சனங்களுக்கு அப்பால் செயல்பட வேண்டும்: நிதி நெருக்கடியில் நாம் இருக்கிறோம் என்பது உண்மை தான். எனவே, எந்தத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவமும், முன்னுரிமையும் தர வேண்டுமோ அந்தத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை விரைந்து வழங்கி அவற்றை செயலாக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும்.
எத்தனையோ திட்டங்களைத் தீட்டினாலும், முதலமைச்சரால் மற்றும் அமைச்சர்களால் அறிவிக்கப்படும் திட்டங்கள் அதிகமான கவனத்தைப் பெறும். அது இயற்கை தான். அப்படி கவனம் பெறும் திட்டங்களை உரிய காலத்தில் செயல்படுத்தி முடித்தாக வேண்டும். குறிப்பிட்ட சில அரசுத் துறைகளின் செயல்பாடுகள் பொது வெளியிலும், சமூக ஊடகங்களாலும் விமர்சனம் செய்யப்பட்டது.
இவற்றில் துறைச்செயலாளர்கள் இதுபோன்ற இடங்களில் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும். துறை ரீதியாக நான் உங்களோடு நேரடித்தொடர்பில் இருக்கிறேன். அமைச்சர்கள் இருக்கிறார்கள். முதலமைச்சர் அலுவலகமும் உங்களோடு தொடர்பில் இருக்கிறது. சிறந்த ஒருங்கிணைப்பு இருக்கிறது.
இதே போன்ற ஒருங்கிணைந்த செயல்பாடு உங்களுக்கும், உங்களுக்கு கீழேயுள்ள அலுவலர்களுக்கும் இருக்கிறதா? என்றால் ஒருசில துறைகளில் இல்லை. அத்தகைய ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லாததால் தான் திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதில் காலதாமதமும், தொய்வும் ஏற்படுகிறது.
எனவே, அதனை சரிசெய்திட இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களை, கண்காணிப்புக் கூட்டங்களை, திட்டமிடும் கூட்டங்களை, கலந்துரையாடல் கூட்டங்களை உங்களுக்கு கீழேயுள்ள அலுவலர்களோடு தொடர்ந்து நீங்கள் நடத்த வேண்டும் என்றும், கள ஆய்வுகளில் நீங்கள் ஈடுபட வேண்டும்.
ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்: அனைத்துத் துறைச்செயலாளர்களும், திட்டங்களுக்கான ஆணைகளை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், கள அளவிலே அத்திட்டங்கள் கடைக்கோடியிலுள்ள பயனாளிகளையும் சென்றடைவதையும், உறுதி செய்யவேண்டும்.
இதற்காகவே, இந்த அரசு பொறுப்பேற்றவுடன், ஒவ்வொரு மாவட்டத்திற்கும், மூத்த I.A.S., அலுவலர்களை கண்காணிப்பு அலுவலராக நியமித்துள்ளது. இவர்களுடைய செயல்பாடுகளை நம்முடைய தலைமைச் செயலாளர் அவர்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்து அவர்களுடைய பணியில் சிறக்கத்தக்க ஆலோசனைகளை அளிக்க வேண்டும்.
அமைச்சர்களுக்கும் துறை அலுவலர்களுக்குமான ஒருங்கிணைந்த செயல்பாடு கூட சில துறைகளில், சில நேரங்களில் ஏற்படாமல் இருப்பதாகவும் நான் அறிகிறேன். இது எங்கும், எப்போதும், எந்தத் துறையிலும் எந்த சூழலிலும் ஏற்படக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன். மக்களுக்கும், ஆட்சி நிர்வாகத்துக்குமான தொடர்பும், அவர்களது அனுபவங்களும், அனைவராலும் மதிக்க வேண்டியது.
அதேபோல் மாவட்ட நிர்வாகத்துக்கும், துறைச்செயலாளர்களுக்குமான ஒருங்கிணைப்பும், ஒருங்கிணைந்த செயல்பாடும் நிச்சயம் அவசியம் ஆகும். ஆட்சியில் இருப்பவர் இடும் கட்டளையைச் செயல்படுத்துபவர்களாக மட்டுமல்லாமல், மக்கள் நலன் கருதி நீங்கள் வைத்துள்ள, உங்களது கனவுத் திட்டங்களையும், அரசுக்குச் சொல்லி, அதனையும் செயல்படுத்த நீங்கள் முனைய வேண்டும்.
முதலமைச்சர் தகவல் பலகை: முதலமைச்சருடைய தகவல் பலகை (CM Dash Board) என்பது தரவுகளைக்கொண்டு முடிவுகளை மேற்கொள்ளும் நவீன நல் ஆளுமைக்கான வழிமுறைகளை உலக அளவில் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக, கடந்த 23.12.2021அன்று முதலமைச்சரின் தகவல் பலகை ஒன்றை நான் தொடங்கி வைத்தேன்.
இதில் ஒவ்வொரு துறையும், தங்கள் துறை சார்ந்த தரவுகளைப் பதிவேற்றம் செய்யுமாறு ஏற்கனவே நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால், இன்னும் சில துறைகள் முதலமைச்சரின் தகவல் பலகையில் தரவுகளைப் பதிவு செய்வதில் முனைப்புக் காட்டவில்லை என்பது என் கவனத்திற்குக்கொண்டு வரப்பட்டிருக்கிறது.
இத்தகைய போக்கைத் தவிர்த்து, நல் ஆளுமையை இந்த அரசு வழங்குவதற்கு அனைத்துத் துறைகளும், தரவுகளை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். சிறப்பான நிர்வாகத்தை அளிப்பது இந்த அரசினுடைய முக்கிய நோக்கம். அந்த வகையில், இளம் வல்லுநர்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள, முதலமைச்சரின் முத்தாய்ப்புத் திட்டம் (Tamil Nadu Chief Minister’s Fellowship Programme) என்ற உன்னதமான ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
30 இளம் வல்லுநர்கள், மூன்று கட்ட தேர்வுக்குப் பின்னர் இந்தத் திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சம்பந்தப்பட்ட துறைகள் அரசு நிர்வாகத்தைச் சிறப்பாக செம்மைப்படுத்தும் வகையில் பயன்படுத்த வேண்டும். அவர்கள் நேரிடையாக, முதலமைச்சர் அலுவலகத்தோடு தொடர்பில் இருப்பார்கள்.
அமைச்சர்கள், துறைச்செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகம் ஆகிய நான்கும் ஒரே நேர்கோட்டில் செயல்பட்டால், நேர்கோட்டில் சென்றால், தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளும் நம்பர் ஒன் என்ற இலக்கை நிச்சயமாக அடையமுடியும்”, என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் 253 அரசியல் கட்சிகள் செயல்படாதவை