ஹைதராபாத் : இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடக்கம், அண்ணாத்த, ஜெயில் டீசர் வெளியீடு, சர்வதேச பல் கருத்தரங்கம், பெகாசஸ் வேவு பார்க்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு, மா.சுப்பிரமணியன் டெல்லி பயணம் என இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு இதோ.
- இல்லம் தேடி கல்வித் திட்டம்: 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றல் இடைவெளியை ஈடுசெய்யும் வகையில் ரூ.200 கோடியில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழுப்புரத்தில் உள்ள மரக்காணம் முதலியார் குப்பத்தில் புதன்கிழமை (அக்.27) தொடங்கிவைக்கிறார்.
- தமிழ்நாட்டில் மழை பெய்யும் இடங்கள்: தமிழ்நாட்டில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, கோவை, திருச்சி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும்.
- சர்வதேச பல் மருத்துவ கருத்தரங்கு: கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு சர்வதேச பல் மருத்துவ கருத்தரங்கு காணொலி (மெய்நிகர்) முறையில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நிபுணர்கள் கலந்துகொண்டு உரையாடுகின்றனர்.
- பெகாசஸ் இன்று தீர்ப்பு: பெகாசஸ் விவகாரத்தில் தனிக் குழு அமைத்து விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது இன்று (அக்.27) தீர்ப்பளிக்கப்படுகிறது.
- மா.சு. டெல்லி பயணம்: தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் முழுமையான மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கக்கோரி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்களிடம் கோரிக்கை எனத் தெரிவித்த தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று டெல்லி செல்வதாக கூறினார்.
- அஞ்சல் குறைதீர் முகாம்: சென்னை பாரிமுனையில் உள்ள பொது அஞ்சல் அலுவலகத்தில் புதன்கிழமை (அக்.27) காலை 11 மணியளவில் அஞ்சல் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
- மின்சார வாகனங்கள் கண்காட்சி: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை மின்சார வாகனங்களின் கண்காட்சி நடைபெறுகிறது.
- ஜெயில், அண்ணாத்த டீசர் வெளியீடு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த, ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
இதையும் படிங்க : தமிழ் சினிமாவின் மார்கண்டேயன் பிறந்தநாள் இன்று