சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் தமிழரசு தாக்கல்செய்த மனுவில், இந்தியாவில் ஜூன் 8 ஆம் தேதி நிலவரப்படி, ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 981 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருவதாகவும், ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 429 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், தொற்றுக்கு ஏழாயிரத்து 200 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் ஜூன் 8ஆம் தேதிவரை, 33 ஆயிரத்து 229 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், 286 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதையும் மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, ஜூன் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள போதும், சென்னையில் தொற்றின் தீவிரம் அதிகமாக இருக்கும் எனச் செய்திகள் வெளியாகி வருவதாகவும், சென்னையில் மட்டும் 23 ஆயிரத்து 298 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதனால், சென்னையில் ஊரடங்கைத் தளர்த்துவதற்குப் பதில், ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வழக்குரைஞர் தமிழரசு கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கட்டுப்பாடுகளை மீறினால் முகாமில் அனுமதி- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்