பொது நூலக இயக்கம் சார்பில் சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள வட்டார நூலகத்தில், குழந்தைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார். மேலும் புதிய நூலகத்திற்கு உறுப்பினராக சேர்ந்த மாணவர்களுக்கான உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், உலக அளவில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு மாணவர்கள் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு ஆற்றல் பெற்றவர்களாக விளங்குகின்றனர். இந்நிலையில், மாணவர்களை நூலகங்களுக்கு வரவழைக்கும் விதத்தில் எளிய முறையில் வாசிக்கும் நடைமுறையை நூலகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து!
- ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் பத்து நாட்களுக்குள் அவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
- அவர்களுக்கான தேதி அறிவித்தவுடன் எங்கு காலிப்பணியிடங்கள் இருக்கிறதோ அந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்படும்.
- வெளிப்படைத் தன்மையோடு கலந்தாய்வு நடைபெறும்.
- தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடைபெறுவதால் ஒரு சிறு தவறு கூட நடைபெறவில்லை.
- ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மிக விரைவிலேயே பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்
இதனைத் தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இதற்கு முன்னர் தற்காலிகமாக மாற்றுப் பணியில் ஐஏஎஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது நிரந்தரமாக முழுநேரமும் ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்தார்.