ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களின் கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும் புதுவையின் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
மேலும், காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் அக்டோபர் 9ஆம் தேதி அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை பொருத்தவரை அக்டோபர் 4, 5 தேதிகளில் மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வரை வீசக் கூடும் என்பதால் இப்பகுதிக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதேபோன்று அக்டோபர் 4ஆம் தேதி ஒடிசா கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய மேற்கு, மத்திய மேற்கு வங்க கடலில், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.